அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட மக்கள் கோரிக்கை!
Tuesday, November 27th, 2018
அரியாலை தென் கிழக்கு மணியம்தோட்டம் பிரதேச மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சென்றிருந்த கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.
இதன்போது குறித்த பகுதி மக்கள் தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் தமது வாழிடங்கள் தற்காலிக கொட்டகைகளாக காணப்படுவதால் பல அசௌகரியங்களை தாம் எதிர்கொண்டு வருவதாகவும் சுகாதாரத் தன்மையுடன் கூடிய மலசலகூட வசதிகளும் தமது பகுதிகளில் காணப்படாமையால் நோய் தொற்று அதிகரிப்பதாகவும் தெரிவித்ததுடன் வீட்டு திட்டம் மலசலகூடம் மற்றும் இலவச மின்ணிணைப்பு போன்றவற்றை தமக்கு பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் தற்போது மழை காலமாதலால் நீர் தேங்கி காணப்படும் பகுதிகளில் அதிகளவு நுளம்பின் பெருக்கம் காணப்படுவதால் டெங்கு போன்ற நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதனால் தமக்கு நுளம்பு வலை பெற்றுத்தர ஏற்பாடு செய்துதருமாறும் கோரிக்கை விடுத்தனர்
மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அம்பலம் இரவீந்திரதாசன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த பிரச்சினைகளை தெரியப்படுத்தி தீர்வு பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


