விபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, October 11th, 2016

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரால் விபத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டுமென யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் நேற்றையதினம் வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் விபத்துக்களால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வயது வந்தவர்கள் மாண்டு போகின்றார்கள். பலர் அங்கவீனர்களாகியும் உள்ளனர். இந்த அவலம் உடனடியாக பொருளாதார இழப்புக்களை நிறுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். எமது வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள், தாதியர்கள் என அனைத்து சமூகத்தினரும் இணைந்து 1 மணித்தியால விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுடைய நோக்கம் அதிகரித்துவரும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதே, வீதி ஒழுங்கு நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். இந்த நடைமுறைகளை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு பொலிஸார் முன்வர வேண்டும். தங்களுடைய கடமைகளை பொலிஸார் சரிவரச் செய்ய வேண்டும். வீதிகளை பாதுகாக்கும் வீதி போக்குவரத்து திணைக்களம் மற்றும் மாநகரசபை ஆகியனவும் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்.

வீதி விபத்தினை தடுப்பது வெறுமென பொலிஸ் தரப்பின் கடமையல்ல. அனைத்து தரப்பும் கவனமெடுத்து செயற்பட வேண்டும். இதன்மூலமே இங்கு நடைபெறும் வீதி விபத்து இறப்புகளை குறைத்துக் கொள்ள முடியுமென யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா,; வைத்திய கலாநிதி   என்.சத்யமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் கே.குலநாயகம், 3ஆயிரத்திற்கும் அதிகமான விபத்து சம்பவங்கள் யாழில் மட்டும் ஒவ்வொரு வருடமும் பதிவாகின்றன. இதில் 68பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இறப்பு மட்டும்தான் எமக்கான பிரச்சினை அல்ல. வீதி விபத்துக்களினால் உடல் அவயங்களை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவும் ஒரு சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் இந்த வருடத்தில் முதல் காலாண்டில் 500க்கும் அதிகமாகவும் இவ்வாறு நடைபெற்றுள்ளன.

வீதி விபத்துக்கள் ஏற்படுத்துவதற்கு பிரதான காரணமாக அமைவது மது போதையில் வாகனம் செலுத்துவதுதான். அடுத்து களரக வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகமாகவுள்ளன. வைத்தியசாலையில் இரவு 10 மணியளவில் வருவோர் மதுபோதையில் விபத்துக்குள்ளான நிலையிலேயே வருகின்றனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர்களோடு மேலும் 10பேர் மதுபோதையில் வந்து வைத்தியசாலை பணிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். இவ்வாறுதான் யாழ்ப்பாணத்தின் நிலை உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும் விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்தும் முகமாகவும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

hospital11

Related posts: