வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் வீடு
 Tuesday, April 12th, 2016
        
                    Tuesday, April 12th, 2016
            வறுமை காரணமாக சிறு குடிசையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த யாழ். வண்ணார்பண்னையைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் தாமாக முன்வந்து வீடொன்றை அமைத்து வழங்கியுள்ளனர்.
கணவர், மனைவி, இரண்டு பிள்ளைகள் கொண்ட மேற்படி குடும்பம் மாதாந்த வருமானம் போதியளவு இன்றிய நிலையில் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னர் தமக்குச் சொந்தமான சிறிய நிலப் பரப்பில் சிறு குடிசை அமைத்து இந்தக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். குடிசை சேதமடைந்து காணப்பட்டமையால் மழை காலங்களில் இந்தக் குடும்பத்தினர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். கடந்த மார்கழி மாதம் கடும் மழை வேளையில் வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தின் தலைவராகவுள்ள கே.வி. சிவனேசன் வண்ணார் பண்ணைப் பகுதியால் பயணித்த போது மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதான இரு பிள்ளைகளுடன் குடும்பமே மழையால் நனைந்தமையைக் கண்ணுற்றார். கவலையுற்றார்.
இந்த விடயம் தொடர்பில் வடபிராந்திய சத்திய சாயி நிலைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் ஆதரவுடன் வீடமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு அறை, சமையலறையுடன் அமைக்கப்பட்ட வீட்டின் நிர்மாணப் பணிகள் யாவும் பூர்த்தியாகியதைத் தொடர்ந்து கடந்த-4 ஆம் திகதி புதுமனைப் புகு நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது. இதன் போது வீட்டின் முன்னால் பொங்கல் வழிபாடு மற்றும் வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் பஜனை நிகழ்வு என்பன நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து வீடு சம்பிராதய பூர்வமாகக் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தின் தலைவர் கே.வி. சிவனேசன், வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தின் மனித மேம்பாட்டுக் கல்வியின் உதவி இணைப்பாளர், கொக்குவில் சாயி மந்திர் நிலையத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        