வடக்கு மாகாணத்தில் மட்டும் 2,759 ஆசிரியர் வெற்றிடங்கள்!

Wednesday, June 6th, 2018

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 759 ஆசிரியர்  வெற்றிடங்கள் நிலவுவதாக மாகாணக்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதற்கு காரணம் துறைசார்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறையே. ஆரம்ப தரம் முதல் உயர்தரம் வரையிலான பாடங்களுக்கு துறை சார்ந்த ஆசிரியர்கள் போதியளவு இல்லை. குறிப்பாக கணித, விஞ்ஞான பாடங்களுக்கு இந்தக் குறைபாடு பெரிதும் உள்ளது.

உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களைத் தெரிவு செய்பவர்கள் ஆசிரியராக சேவையாற்றுவதை விடுத்து வேறு துறைகளுக்கு செல்கின்றனர். அத்துடன் இந்த துறைகளை உயர்தரத்தில் கற்பவர்கள் குறைவு. நியமனங்கள் தொடர்பில் கொழும்பு கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும் துறைசார்ந்தவர்கள் விண்ணப்பிப்பது குறைவு. இதன் காரணமாக வெற்றிடங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. படிப்படியாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாகாணத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆசரியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 438. இதில் தற்போது 15 ஆயிரத்து 679 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். ஆகவே மாகாணத்தில் இன்னமும் 2 ஆயிரத்து 759 வெற்றிடங்கள் நிரப்ப வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: