யாழ். மாவட்டத்தில் இளைஞர் தினம் நடத்துவதற்கு ஏற்பாடு – யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர்  தவேந்திரன் 

Saturday, May 14th, 2016

எதிர்வரும்- 23 ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் இளைஞர் தினம் நாடாத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர்  ஐ . தவேந்திரன் இவ் வேலைத் திட்டத்திற்காக இளைஞர் சேவை அதிகாரியினால் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச சம்மேளனத் தலைவர் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் , இளைஞர் கழக உறுப்பினர்கள் 100 பேர் பங்குபற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்டக் காரியாலயத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை (13-05-2016) முற்பகல் -11.45 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,

” நாட்டின் எதிர்காலத்திற்காக இளைஞர்களின் சக்தி ” எனும் தலைப்பில் விரிவுரை நடாத்தப்படவுள்ளது. இளைஞர்களின் சக்தி நாட்டிற்கு எவ்வாறு  முக்கியம் பெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு  நடாத்தப்படவுள்ளது. அத்துடன் இளைஞர்  தினத்தை முன்னிட்டு 23.5.2016 தொடக்கம் 26.5.2016 வரை பிரதேச செயலக ரீதியாக இளைஞர் கழகங்கள் மற்றும் பாடசாலைகளிலும்  கொடி தினம் நடைபெறவுள்ளது. பிரதேச செயலக ரீதியில் அந்தந்தப் பிரதேச செயலருக்குக் கொடி அணிவித்து இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கொடி தினம் மூலம் கிடைக்கும் நிதியானது துறுணு சிரம சக்தி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கோ அல்லது கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கோ வழங்கப்படும் .   பாடசாலைகள் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து பெரும்பாலான தொகை அந்தந்தப் பாடசாலைகளுக்கே திருப்பி வழங்கப்படும்.

இளைஞர் தினத்தை முன்னிட்டு 13 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கான இளைஞர் விருதுப் போட்டி இம்மாதம்-21 ஆம் திகதி யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயத்தில்  இடம்பெறவுள்ளது . இதுவரை இப் போட்டிக்கு விண்ணப்பிக்காத 29  வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அனைவரும் அன்றைய தினம் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் . மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் 22.5.2016 கைதடி நவீல் பாடசாலையில் நடைபெறும். இந்தப் போட்டிகள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் . ஆங்கிலம் , தமிழ் அறிவிப்பாளர் , ஆங்கிலம், தமிழ் பேச்சு , ஆங்கிலம் , தமிழ் இளம்பாடகர் , கிராமியப் பாடல் , கிராமிய நடனம் , புத்தாக்க நடனம் , பரத  நாட்டியம் , அபிநயம் , சாஸ்திரிய இசைக் கருவிகள் இசைத்தல் , சித்திரம் , புகைப்படம் , சிற்பங்கள் ஆகிய பல்வேறு போட்டிகள் இதன் போது இடம்பெறும் . மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெறுபவர்களுக்கான பதக்கங்களும் , சான்றிதழ்களும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு யூன் மாதம் -15 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ளது . இதன் போது சிறந்த இளைஞர் கழகங்கள் , சிறந்த இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கெளரவிக்கப்படவுள்ளனர். வடமாகாண சபையும் இளைஞர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என எம்மிடம் கேட்டுள்ளது . இதற்காக உதவி இயக்குனர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் பே .சுபாகர் , யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ். சண்முகவடிவேல் , உதவி இளைஞர் சேவைகள் உத்த்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: