யாழ்ப்பாணத்தில் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!

Wednesday, September 28th, 2016

வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சும் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவினரும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (27) பிற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திடலில் வடமாகாண சுகாதார,சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்-

யாழ். மாவட்டத்தில் 1753 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 150 பேரும், மன்னார் மாவட்டத்தில் 108 பேரும், வவுனியா மாவட்டத்தில் 212 பேரும் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் வடகீழ் பருவ மழை பெயர்ச்சிக்குப் பின்னரும், தென்மேல் பருவ மழை பெயர்ச்சிக்குப் பின்னரும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரிப்பது வழமை.அந்த அடிப்படையில் எங்களுடைய பிரதேசத்தில் எதிர்வரும் மாதம் முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை ஆரம்பிக்கவிருக்கிறது. பொதுவாக எங்களுடைய பிரதேசங்களில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை.

ஆகவே, நாங்கள் முன்கூட்டியே டெங்கு பரவக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அழிப்பதன் மூலம் டெங்கு பரம்பலைத் தடுக்க முடியும்.டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் ஏற்பாடு செய்து நடாத்தப்படுகிறது.

உண்மையில் இந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகவேயிருக்கிறது. 2016 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையில் மொத்தமாக 41 ஆயிரம் பேருக்கு மேல் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இதன் தாக்கம், பரம்பல் என்பன அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே, டெங்கு கட்டுப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடில் நாங்கள் இருக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

dengue-1210

Related posts: