முறைகேடுகளில் ஈடுபடும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் கோபா குழு அதிருப்தி!

Thursday, January 18th, 2024

முறைகேடுகளில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாமை குறித்து கோபா குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது

சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக திட்டமொன்றைத் தயாரிக்கவும் கோபா குழு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.

குறித்த குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அன்றையதினம் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

அம்பாறை தமண்ண பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி வலைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து குழு கேட்டறிந்தது.  

அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு குழு பணிப்புரை விடுத்தது. திருப்தியடையாத சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவர்களை வலுவூட்டுவதற்கு உழைக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். தற்போது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள ஏழு நிதியங்களில் உள்ள பணத்தின் அளவு மற்றும் அந்த நிதியங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை குழுவிற்கு அனுப்பிவைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கி முறைமையை கணினிமயமாக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் ஆராயப்பட்டது. அதன்படி, தற்போது 1089 சமுர்த்தி வங்கிகள் வலையமைப்பில் இணைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அனைத்து வங்கிகளும் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாததால், ஒவ்வொரு வங்கிக்கும் கணினி மயமாக்கும் திகதியை வழங்கி, அனைத்து வங்கிகளும் ஒரே முறையில் செயற்படத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதேவேளை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய பணியாளர்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்த தலைவர், அதற்கமைய ஊழியர்களுக்கு நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் குறித்த அறிக்கையை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார். மேலும் புதிய பணியாளர்களை விரைவில் பணியமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: