மாவிலைத் தத்தி நோயால் மாமரங்களுக்கு பாதிப்பு!

Tuesday, March 13th, 2018

மாமரங்களில் ஏற்பட்டுள்ள மாவிலைத் தத்தி நோயால் பூக்கள் கருகி பாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய கடுமையான வறட்சி வெப்பம் பனி போன்றவற்றால் மாமரங்களில் பூத்த பூக்களில் மாவிலைத் தத்தி என்ற நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோய்த் தாக்கத்தால் பூக்களின் இன விருத்தி பாதிக்கப்படுவதோடு காய்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாமரங்களில் பரவலாக இந்த முறை இந்த நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. அதிகமான மாமரங்களில் பூக்கள் மலர்ந்துள்ள போதும் அவை கருகி பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இந்த நோய்த் தாக்கத்தை சிலர் புகையூட்டியும் கட்டுப்படுத்தி வருகின்றனர். புகையூட்டுவதன் மூலம் இந்த மாவிலை தத்திகளை இவ்வாறு ஒளிக்க முடியும் என்று மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார். கொடிகாமம், மீசாலை, வெள்ளம்போக்கட்டி கச்சாய் அல்லாரை போன்ற பகுதிகளில் மாமரங்கள் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.

மாமரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கி காய்கள் உருவாகத் தயாராக இருந்த நிலையில் திடீரென பூக்கள் அனைத்தும் கருகி குருத்துக்களுடன் முற்றாக உதிர்ந்து விழுகின்றமையைக் காணமுடிகின்றது. மாமர இலைகள், பூக்கள், குருத்துகள் முற்றாக கறுப்பு நிறமாக மாறி நிலத்தில் கொட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில் முன்னைய காலங்களில் இவ்வாறு மாமரங்கள் பாதிக்கப்படுவதுண்டு. இருப்பினும் இந்த வருடம் அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. மழை வெப்பம் பனி மூன்றும் மாறி மாறி வருவதே பாதிப்புக்குக் காரணம் என்றனர்.

Related posts: