மாணவர்கள் பண்பானவர்களாக மிளிரவேண்டும்- யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்
Thursday, June 9th, 2016
சமூக மட்டத்தில் மாணவர்கள் நல்லவர்களாகவும் பண்பானவர்களாகவும் வாழ்ந்து மிளிர வேண்டும் என யாழ்.மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்துள்ளார்
யாழ். ஆயரின் பெயர் கொண்ட திருவிழாவை முன்னிட்டு ஆயர்தின விழா நேற்றைய தினம் யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆயர் இதனைத் தெரிவித்தார்
மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில்
இன்றைய சமுதாயமானது திசை தெரியாது செல்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சினிமாப் படங்களைப் பார்ப்பதும் அதில் காட்சிப்படுத்தப்படுகின்ற அடிதடி சண்டைகளைப் பார்த்து அதனை சமூகத்தில் செய்கின்ற பண்பாகவே காணப்படுகின்றது. ஆனால் அதே சினிமா பாணியில் அத்தகைய குற்றச் செயல்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளை இளைஞர் சமுதாயம் கண்டுகொள்வதில்லை
இதனாலேயே தான் சமுதாயத்தில் அடிதடிக் கலாசாரம் உருவாகியுள்ளது. இது நிறுத்தப்படவேண்டும். மாணவர்களான நீங்கள் நல்லவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வாழவேண்டும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலமே உயர்ந்த நிலையை அடையமுடியும்
இன்றைய நற்செய்தியில் நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உலகிற்கு நீங்கள் ஒளியாக இருக்கிறீர்கள். இந்த வசனங்கள் ஊடாக வாழ்வு மற்றும் பணிகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. உப்பு தொடர்பில் உணவிற்கு ருசியைத் தருகின்றது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆகவே அளவோடு பயன்படுத்தவேண்டும்
ஒளியினை நாம் கீழ்நோக்கி ஒருபோதும் வைக்கமுடியாது. ஒளியை உயரத்தில் வைப்பதன் மூலமே அவ்விடம் முழுவதும் ஒளி கிடைக்கும். அதுபோல்தான் எமது வாழ்வும் பிறருக்கு பயன்மிக்கதாக காணப்படவேண்டும்
மாணவர்களின் பிரதான கடமையானது கல்வி கற்பதாகும். இதனைத் திறம்படச் செய்யவேண்டும். அத்துடன் மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து கற்பதன் மூலமே உலகிற்கு பயன்மிக்கவராக மிளிர முடியும் எனத் தெரிவித்தார்
Related posts:
|
|
|


