மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள  மயானங்களை அகற்றக் கோரி   யாழில் தொடர் சத்தியாக்கிரகம்!

Wednesday, July 12th, 2017

யாழ்.  குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் காணப்படும் மயானங்களை அகற்றக் கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(12) யாழ். புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக  காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

முற்பகல்- 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ள குறித்த தொடர் சத்தியாக்கிரகப்  போராட்டம் ‘வடக்கு மாகாண சபையே! மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்று’, ‘ மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்துக் கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து’  எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பிணங்களை எரியூட்டும் மயானங்களால் சுற்றுச் சூழல் மாசடைதல், சுகாதாரப் பாதிப்புக்கள், உளவியற் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பாதிப்புக்களை அவற்றுக்கு அருகில் வாழும் சாதாரண மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது தொடர்பாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும், ஏனைய மக்கள் அமைப்புக்களும் பல தடவைகள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் இக்காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு  ஆதரவு வழங்குமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts: