புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் – அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளரிடம் மீண்டும் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, March 24th, 2022

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி, நூலண்ட்டிடம் தெரிவித்தார்.

அது பற்றி தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பசுமைத் தொழிநுட்பத்தை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தவும், சைபர் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நூலண்ட் தெரிவித்தார்.

இந்நாட்டின் கல்வி வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் மூலம், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளினால், இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைத் தணிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த தீர்மானம் தொடர்பாகவும், அதேபோன்று உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் திருத்தத்திற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நூலண்ட் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: