புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்!

Thursday, September 8th, 2016

எவ்வித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகளில் 275 பேர், வடக்கில் உள்ளனர் . ஆனால் தேசிய பாதுகாப்புக்கு அவர்களால் அச்சுறுத்தலும் இல்லை’- என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நாவற்குழி பிரதேசத்தில், 270 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. தொழில் நிமித்தமும் வர்த்தகங்களை மேற்கொள்ளும் நோக்கிலுமே, இந்த 270 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த கட்டளைத் தளபதி, ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்களை விடக் குறைந்தளவினரே, நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்றுப் (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் –

‘எவ்வித புனர்வாழ்வும் பெறாத முன்னாள் போராளிகளில் 55 பெண்கள் அடங்குகின்றனர். இதுவரையில், 2,963பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 615பேர் பெண்களாவர். இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தான் எமது நோக்கம். அதற்காகவே செயற்படுகின்றோம். ஆயுதக் குழுக்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில், புலனாய்வுப் பிரிவின் ஊடாக அவதானித்து வருகின்றோம். அத்துடன், வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை, ஒருபோதும் அகற்றமாட்டோம்.
யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அதனால்தான், போதைப்பொருள், கஞ்சாக் கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதாமலுள்ளன. இருப்பினும், அவை தொடர்பில், இராணுவம் நடவடிக்கை எடுக்காது. பொலிஸார், எமது உதவியை நாடினால் மாத்திரமே, இராணும் தனது ஒத்துழைப்பை நல்கும். வடக்கில், இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில், இங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று, அரசியல்வாதிகள் போடும் கூச்சல், வெறுமனே சர்வதேசத்தக்கானது மாத்திரமாகும்.

வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த 62 சதவீதமான காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 7210.98 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 2.7 சதவீத காணிகளிலேயே, இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதேவேளை, வடக்கில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகளில் 87.78 சதவீதமானவை அகற்றப்பட்டுள்ளன. 12.22 சதவீதமாக கண்ணிவெடிகளையே அகற்றவேண்டியுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

IMG_5207

Related posts: