பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டத்திட்டம் ஆரம்பம் – தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறித்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக பொழுதுபோக்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு திட்டத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்குரிய தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தேசிய போஷாக்கு நிதியத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த தேசிய போஷாக்கு நிதியத்தின் ஒதுக்கீடுகளூடாக, பாடசாலை மாணவர்களின் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: