தொடர் மழை:  யாழ்ப்பாணத்தில் வெங்காயப் பயிர்ப் பாதிப்பு!

Tuesday, May 29th, 2018

தொடர் மழையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக வெங்காயப் பயிர்ச்செய்கை பெருமளவில் சேதமடைந்துள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழைநீர் வெங்காயப் பயிர்களின் தாள்களில் தங்கி நிற்பது மற்றும் முரண்பாடான காலநிலைகளால் வெங்காயப் பயிர்கள் தாள் அழுகி சேதமடைந்துள்ளன.

காலபோகப் பயிர்ச்செய்கைக்கான விதை வெங்காயத் தேவை மற்றும் யாழ்ப்பாண வெங்காயத்தின் விலை அதிகரிப்பு மற்றும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சிறுபோக வெங்காயப் பயிர்ச்செய்கை கணிசமான அளவு செய்கை பண்ணப்பட்டிருந்தது. இந்த வருடம் சிறுபோக வெங்காயப் பயிர்ச்செய்கை ஆயிரம் ஹெக்ரேயருக்கு மேல் செய்கை பண்ணப்பட்டதாக விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்ட மரபு வழி வெங்காயப் பயிர்ச்செய்கையோடு உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தியும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. விதை வெங்காயத்தின் விலை 50 கிலோ 18 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத விலையிலும் உண்மை வெங்காய விதை கிலோ 9 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத விலையிலும் கொள்வனவு செய்து பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறுபோக வெங்காயப் பயிர்ச்செய்கை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெரும்போகச் செய்கைக்கான விதை வெங்காயத்துக்கு தட்டுப்பாட்டையும் விலை அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் எதிர்வு கூறுகின்றனர்.

Related posts:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை - நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சர...