தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஈ.பி.டி.பி நிர்வாகச் செயலாளர்கள் பங்கேற்பு

Tuesday, April 11th, 2017

நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களினால் முற்றாக அழிவடைந்த பிரசித்தி பெற்ற காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலின் மீள்கட்டுமாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் இந்துமதக் குருக்களினது சிறப்பு பூசை வழிபாடுகளுடனும், இந்துமதத் தலைவர்களின் ஆசிகளுடனும் கோயில் வளாகத்தில் நேற்றைய தினம்(10) சுபநேரத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்த கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளரும், வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் காங்கேசன்துறை, தையிட்டி உள்ளிட்ட வலி. வடக்கின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இவ்வனர்த்தம் காரணமாக கணையவிற் பிள்ளையார் கோயிலும் முற்றாக அழிவுக்குள்ளாகி இருந்தது.

வலி. வடக்கின் பல பகுதிகள் படைத்தரப்பினரிடமிருந்து விடுவிக்கப்படுவதற்கும், அங்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கும் அளப்பரியது என்பதுடன் தையிட்டிப் பகுதி மீள்குடியேற்றத்திற்காக 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும், வடமராட்சி தென்மராட்சி ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், வலி. வடக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

Related posts: