தெற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட நடுக்கமே காலியில் ஏற்பட்ட நில அதிர்வுக்குக் காரணம்!

Wednesday, September 28th, 2016

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று  நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு, 2.9 ரிக்டர் அளவில் பதிவானதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்தது.

இந்த நில அதிர்வு, பல்லேகெலே மகாகனதராவ, ஹக்மன ஆகிய பகுதிகளிலுள்ள நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களில் பதிவாகியுள்ளது.

நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் பதிவான சில சீ.சீ.டி.வி காட்சிகளைக் கண்காணித்தபோது, அவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படாத போதும், காலி, பத்தேகம, வந்துரம்ப, அஹங்கம, ஹபராதுவ, ரத்கம மற்றும் ஹிக்கடுவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர்.

தெற்கு கடற்பரப்பில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலைவர் கலாநிதி கித்சிறி திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் உருவாகி வரும் நிலத்தட்டுக்கள் காரணமாக இத்தகையக நடுக்கங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் குறைந்தளவிலான அதிர்வே பதிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டார். காலியில் உணரப்பட்ட சிறு அளவிலான இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கடந்த வருடத்திலிருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமகாராம பகுதியிலும் மார்ச் 12 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், டிசம்பர் 9 ஆம் திகதி கண்டி மாவட்டத்திலும் நில அதிர்வுகள் பதிவாகின.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.

20-1468987638-earthquake45-600

Related posts: