தென்மராட்சியில் அண்மைக்காலமாக கால்நடைகளின் திருட்டு அதிரிப்பு!
Friday, January 20th, 2017
தென்மராட்சி பகுதியில் அண்மைக் காலமாக கால்நடைகள் திருட்டுப் போவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தச்சன் தோப்பு, நாவற்குழி பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்படும் ஆடு, மாடுகளை வாகனத்தில் வரும் திருட்டுக் கும்பல் திருடிச் செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதும், பொலிஸார் குறித்த பகுதிகளில் ரோந்துக்கடமையில் ஈடுபட வருவதில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் அண்மையில் யாழ். பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சரிடம் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
ஆனால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சரும் இவ் விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கால்நடைகள் இவ்வாறு திருட்டுப் போவதனால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வழங்கப்பட்ட ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கட்டுவதா? சமையல் வேலையில் ஈடுபடுவதா? என கால்நடைகளை பறிகொடுத்தார் ஆதங்கப்படுகின்றனர். இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளே இவ்வாறு கால்நடைகளை குறிவைத்து திருடிச் செல்கின்றனர். இவ்வாறு திருடப்படும் கால்நடைகளை யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி பகுதிகளுக்கு கொண்டு சென்று இறைச்சியாக்குகின்றனர். இவ் விடயத்தில் வடமாகாண பிரதிநிதி பொலிஸ் மா அதிபர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:
|
|
|


