குடா நாட்டில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுநிலையங்கள் – ஜே.வி.பி!

Sunday, December 11th, 2016

மதுபான நுகர்வில் முதலிடம் பெற்றுள்ள யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்ற 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா 8 வீதம் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில்  மதுபாவனை தற்போது உரிமைகளில் ஒன்றாக மாறிவருகின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகியபோது நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, மதுபான நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வினவினார்.

“யாழ். மாவட்டத்தில் 435 கிராம சேவகப் பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுபான நிலையங்கள் வீதம் காணப்படுகின்றன. அதிகளவான மதுபாவனை பதிவாகியுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 181 மதுபான நிலையங்கள் உள்ளன. அங்குள்ள கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒவ்வொரு பிரிவுகளிலும் 6 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. மட்டக்களப்பில் மொத்தம் 59 மதுபான நிலையங்கள் காணப்படுவதோடு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுபான நிலையங்கள் உள்ளன. யாழ். மாவட்டத்தில் அதிகளவான மதுபாவனை உள்ளதாகவும், இரண்டாவதாக நுவரெலியா மாவட்டம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். கிராம சேவகர் பிரிவுகளில் 8, 9 மதுபான நிலையங்கள் காணப்படுவது நுகர்வு அதிகரிப்பதையே எடுத்துக்கூறுகின்றது. எனவே இவற்றுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியுமா?” என்றார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, 2100 மில்லியனாக 2014ஆம் ஆண்டு நவம்பரில் பதிவான மது வரி வருமானம், தற்போது 13800 மில்லியனாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை என்னவென்றால் மதுபான நுகர்வை குறைப்பதாகும். இதன் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களினதும் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கினால் அவர்கள் வரி செலுத்துவதே அரசாங்கத்திற்கு அனுகூலமாகும். 2014ஆம் ஆண்டு நவம்பரில் 2100 மில்லியன் ரூபாவாக காணப்படட மது வரி வருமானம், இன்று அந்த வருமானம் 13800 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனவே இதில் பின்பற்றவேண்டிய அணுகுமுறை பற்றி யோசனை தேவைப்படுகிறது” – என்றார்.

bimal-rathnayake

Related posts: