‘கபாலி’ திரைப்படத்தால் 225 இணைய தளங்கள் முடக்கம்!

Saturday, July 16th, 2016

ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கபாலி’ திரைப்படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ள 225 இணையதளங்களை முடக்க இந்திய இணைய தள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளரான தாணு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒரு திரைப்படம் வெளியாகி சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக பல இணையதளங்களில் வெளியாவதாகக் கூறியிருந்தார்.

மேலும், அந்தப் படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு சி.டியாகவும் விற்கப்படுவதோடு பேருந்துகளிலும் உள்ளூர் கேபிள் டிவிக்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன என்றும் கூறியிருந்தார். ஆகவே, கபாலி திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ இந்தியாவில் இணைய சேவையை வழங்கும் 169 நிறுவனங்களுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மீறி வெளியிடும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

அந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, வெள்ளிக்கிழமையன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இம்மாதிரி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யப் பயன்படும் 225 இணையதளங்களைத் தடை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

தவிர, நடிகர்கள் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றும் நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் பொறுப்பான பாத்திரங்களிலேயே நடித்ததாகவும் நீதிபதி கிருபாகரன் சுட்டிக்காட்டினார்.

Related posts: