கணவனை இழந்து பரிதவிக்கும் ஸ்கொட்லாந்து பிரஜை உதவிசெய்யுமாறு கோரிக்கை!

Tuesday, June 27th, 2017

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் நாடு திரும்ப உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

டயனி டி சொய்சா (Diane De Zoysa) என்ற குறித்த பெண்ணின் கணவரான 26 வயதுடைய பிரியஞ்ஜன டி சொய்சா கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பெண் கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு இலங்கையில் தனது கணவருடன் குடியேறியுள்ளார். தற்போது தன்னிடம் எதுவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்தையும் கைவிட்டு இலங்கையில் வந்து குடியேறியதாகவும் தற்போது அனைத்தும் துயரமாக முடிந்து விட்டது எனவும் டயனி கவலை தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் விடுமுறையைக் கழிக்க இலங்கை வந்திருந்த டயனி, தான் தங்கியிருந்த ஹோட்டலில் பணி புரிந்த பிரியஞ்ஜனவை சந்தித்துள்ளார்.

இருவரும் தமது தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்டதுடன் ஸ்கொட்லாந்து திரும்பிய பின்னரும், டயனி இணையத்தளம் மூலம் பிரியஞ்சனவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, ஏழு மாதங்களுக்கு பின்னர் டயனி, மீண்டும் இலங்கை வந்ததுடன், கடந்த 2012ம் ஆண்டு பிரியஞ்ஜனவை திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவனின் குடும்பம் வறியது என்பதால், ஸ்கொட்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்று இலங்கையில் வீடு ஒன்றை கட்டியதுடன் கணவனுக்கு தொழில் செய்ய சிறிய பஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
எனினும், அவர் எதிர்பார்த்தது போன்று அவரது மன வாழ்க்கை அமையவில்லை.

கணவனுக்கு பிறிதொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக டயனிக்கு சந்தேகநகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் 30ம் திகதி நண்பர்கள் வீட்டில் இருந்த போது தனது கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும், அவரிடம் கப்பம் கேட்டு சிலர் மிரட்டி வந்துள்ளதாகவும் டயனி கூறியுள்ளார்.

மேலும், வீட்டில் சிங்கள மொழியிலுள்ள திருமண பதிவுச் சான்றிதழ் ஒன்றை பார்த்ததாகவும், அதனை மொழி பெயர்க்க தன்னால் இயலாது போன போதும், அது தனது கணவருடையதாக இருக்க வேண்டும் என தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அதில் திருமணப் பெண்ணின் வயது 18 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கணவன் இறந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள வீட்டை தன்னால் விற்க இயலாதுள்ளதாகவும், அது தனது கணவரின் குடும்பத்தார் பெயரில் உள்ளதாகவும் அப் பெண் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அதனை விற்பனை செய்து விட்டு, ஸ்கொட்லாந்து சென்று தனது வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்காக சட்டத்தரணி ஒருவரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பிரித்தானிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் டயனி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: