ஊடகச் சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்!

Tuesday, November 29th, 2016

நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுதந்திர ஊடக சுட்டெண்ணில் இலங்கை 24 இடங்கள் முன்னேறி 165 ஆவது இடத்திற்கு வந்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேலாக எந்த ஒரு ஊடகவியலாளரும் கடத்தப்படவோ தாக்கப்படவோ இல்லை என்று குறிப்பிட்ட அவர் ஊடக சுதந்திரத்தை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். 87 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு 20 பேர் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர். நான்கு ஊடக நிறுவனங்கள் 5 தடவைகள் தாக்கப்பட்டுள்ளன. 80 ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டும் சென்றுள்ளனர்.

கடந்த ஒரு வருட காலத்தில் எவரும் கடத்தப்படவில்லை. தாக்கப்படவுமில்லை. செய்தி தொடர்பில் தெளிவுபெற கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்ட ஊடக சுதந்திர சுட்டெண்ணின் பிரகாரம் 180 ஆவது இடத்தில் இருந்த எமது நாடு 24 இடங்கள் தாண்டி 165 ஆவது இடத்தை எட்டியுள்ளது. தெற்காசியாவில் குறைந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடாக இருந்த எமது நாடு 24 இடங்கள் முன்னேறியுள்ளது. கடந்தகால ஊடக அடக்குமுறை தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல கொள்கைகளை செயற்படுத்துவதினூடாக எமது நாடு இந்த சுட்டெண்ணில் மேலும் முன்னேற்றமடையும்.

வரலாறும் முக்கியமான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்தியுள்ளோம். எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இது யதார்த்தமாகும். உயர்ந்த ஊடக கலாசாரத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஊடகவியலாளர்களின் உச்சபட்ச சம்பளம் தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. ஊடகவியலாளர்கள் சம்பளம் மற்றும் நலன்புரி தொடர்பில் இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இங்கும் அவ்வாறான சட்டமூலமொன்றை கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பலப்படுத்துவதற்காக சுதந்திர கண்காணிப்பு சபையொன்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதற்கு மக்களின் கருத்தறிய இருக்கிறோம். ஊடகங்கள் மக்கள் நலனை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச மட்ட பயிற்சி வழங்கவும் இங்கு சர்வதேச ஊடக அகடமி ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

சகல திரையரங்குகளையும் டிஜிடல் வசதியுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். 10 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி விருது விழாவை நடத்தவும் சராசரி விருது விழாவை 8 வருடங்களின் பின்னர் நடத்தவும் இருக்கிறோம். நாம் பொறுப்பேற்கையில் லேக்ஹவுஸ் நிறுவன கடன் 800 மில்லியன்களாக இருந்தது. புதிய நிர்வாகம் அதனை 300 மில்லியனாக குறைத்துள்ளது. இதன் லாபம் 150 மில்லியனாக கூடியுள்ளதோடு வருட இறுதியில் 200 மில்லியனாக அதிகரிக்கும். பத்திரிகைகளின் விற்பனை 10 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. நடுநிலையாக பத்திரிகைகள் செயற்படுகின்றன.

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு எதிராக 1.5 பில்லியன் ரூபா அவமதிப்பு வழக்குகள் இருந்தன. தற்பொழுது ஒரு வழக்குகூட பதியப்படவில்லை. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 3500 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் 300 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. தினமின, டெயிலி நியூஸ், ஒப்சேவர் பத்திரிகைகளின் சகல பக்கங்களும் வர்ணமயமாக்கப்பட்டுள்ளன.

ரூபவாஹினியின் நஷ்டம் குறைக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு வழங்கிய 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இவர்களுக்கு வழங்காதிருந்தால் ரூபவாஹினி நஷ்டத்தில் இயங்கியிருக்காது. ரூபவாஹினியின் மின்சாரக் கட்டணம் 10 மில்லியனாக உயர்ந்துள்ளது. இங்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கி இருக்கிறோம். ரூபவாஹினிக்கு மீள கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடக்கு தெற்கு நல்லிணக்கத்திற்காக நாம் வடக்கிற்கு யாத்திரை சென்றோம். பல வருடங்களின் பின் ஊடக அமைச்சர் யாழ்ப்பாணம் வந்ததாக மக்கள் எம்மை வரவேற்றனர்.

25 வீதம் பேசும் மக்களுக்காக தனியான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். நல்லிணக்கத்தின் அலைவரிசையாக நேத்ரா அலைவரிசை நாள் முழுவதும் இயங்க இருக்கிறது. இதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 180 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நாடகங்களை காண்பிக்க இலஞ்சம் வழங்க நேரிட்டது. அழுத்தமின்றி சுதந்திர குழுவினூடாக நாடகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. யானை தாக்குதல் சம்பவம் குறித்து செய்தி திரட்டச் சென்றபோது உயிரிழந்த அநுராதபுரம் ஊடகவியலாளரின் குடும்பத்திற்கு வீடு கட்டி வழங்க இருக்கிறோம்.

colgayantha-new185032163_5063765_28112016_arr_cmy

Related posts: