இ.போ.ச பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பிணை!
 Monday, November 21st, 2016
        
                    Monday, November 21st, 2016
            பட்டா வாகனத்தில் வந்து பேருந்தையும் மறித்து கலகம் செய்த 12 பேரையும் தலா 1லட்சம் பெறுமிதியான இரண்டு ஆட்பிணையாளிகளின் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதித்தது.
கடந்த மாதம் 12திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த காரைநகர் சாலைக்குரிய இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் வைத்து வழி மறித்த பட்டா வாகனத்தில் வந்த இளைஞர்கள் அதனுள் ஏறி சாரதியையும் நடத்துநரையும் அச்சுறுத்தி நடத்துநரின் கையில் இருந்த பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். பேருந்தைத் தாக்கி சேதப்படுத்தினர் என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கமராக்களின் உதவியுடனும் வாகன இலக்கத்தை அடிப்படையாக கொண்டும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 12 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேக நபர்களில் பலர் மாணவர்கள் எனவும் சில சந்தேக நபர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றும் குறிப்பிட்டதுடன், பேருந்துக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார். தாக்குதலால் பேருந்துக்கு 2லட்சத்து 23ஆயிரம் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் சந்தேக நபர்கள் இழப்பீட்டை செலுத்த முன்வருவதால் பிணையில் விடுவதில் தமக்கு எதிர்ப்பு இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அதையடுத்து சந்தேக நபர்களை பிணையில் விடுவித்த நீதிமன்றம் அடுத்த தவணையில் இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        