இலங்கையில் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம்!
Thursday, December 15th, 2016
ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திர பேம கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வெசாக் தினத்திற்கென அரசாங்கம் 25 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளது. கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள 115வது இலக்கத்தில் செயலகம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதனை வழி நடத்துவதற்காக விசேட செயலணியுடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச வெசாக் தினத்திற்கான பல்வேறு குழுக்களை அமைத்திருக்கிறது. சர்வதேச வெசாக் தின நிகழ்வு அடுத்த வருடம் மே மாதம் 12ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 25 நாடுகளின் தலைவர்கள் இ;ந்த வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வார்கள். மே மாதம் 13ம் திகதி சர்வதேச பௌத்த மாநாடு இடம்பெறவிருக்கிறது. மறுநாள் கண்டி, தலதா மாளிகையில் விசேட நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.
இந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அடுத்து வருட முதல் பகுதியில் இலங்கை வரவுள்ளார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக சர்வதேச வெசாக் தின நிகழ்வு அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் வெசாக் தின நிகழ்வு இதுவரை தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 1 தடவையும் இடம்பெற்றுள்ளது.
2561வது புத்த வருடத்தை விமர்சையான முறையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திர பேம கமகே தெரிவித்துள்ளார்.இதனை முன்னிட்டு அடுத்த மாதம் முதல் பல்வேறு நிகழ்வுகள் பிரதேச செயலாளர் மட்டங்களில் நடத்தப்படவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


