இந்த ஆட்சியில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை –  மங்கள சமரவீர!

Monday, July 18th, 2016

யுத்தக் குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையின் அனுசரணையில் ஐ.நாவில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறி வருகின்ற நிலையில், நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு நீதி விசாரணை குழுவினர், உள்ளக விசாரணையில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் மங்கள சமரவீரவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாவட்ட செயலர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனங்களுக்கு இடையேயான பிளவை சீர்படுத்தி நாட்டை மீட்டெடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளதென குறிப்பிட்ட அமைச்சர், ஜனநாயகம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுவதாகவும், இதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதவான்கள் உள்ளீர்க்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், தமது நிலைப்பாடும் அதுவே என குறிப்பிட்ட அமைச்சர் மங்கள, நல்லாட்சி அரசாங்கத்தில் ஒருபோதும் சர்வதேச பங்களிப்புக்கு இடமளிக்கப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இணை அனுசரணையில் கடந்த வருடம் ஐ.நாவில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக நிராகரித்து வருகின்றமையானது கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: