ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, September 28th, 2023

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை மத்திய சுகாதார அமைச்சின் பாவனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் பதில் மாகாண சுகாதார பணிப்பாளருமான வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதார விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அதிகாரத்துக்கு உட்பட்ட கட்டடம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சுக்கு வழங்குவது பொருத்தமற்றது எனத் தெரிவித்தார்.

இவ்வாறான விடயங்கள் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் பலவீனத்தன்மையை ஏற்படுத்தும் எனவும் இதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.

இதன் போது பதில் அளித்த வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், தன்னிடம் கோரிக்கை அனுப்பப்பட்டதாகவும் குறித்த கடிதத்திற்கு தான் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

 இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி, யாழ் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அருகில் உள்ள பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை கேட்டேன்.

ஆனால் இந்த கோரிக்கையினால் பிரச்சனை ஏற்படுமாயின் பிரச்சனைக்கு உள்ளாக விரும்பவில்லை. ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப் பெறுவதற்கான கடிதத்தை அனுப்புவதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவை தலைவர் சிவஞானம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடனோ அல்லது வைத்தியர் சத்தியமூர்த்தியுடனோ எனக்கு எவ்வித  பிரச்சினையும் இல்லை.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கத்தின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் மருத்துவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராட்டிப் பேசியவன் நான்.

ஆனால் எமக்கு வழங்கப்பட்ட மாகாண அதிகாரங்களை சிறிது சிறிதாக மத்திய அரசிடம் வழங்குவது கவலை அளிக்கின்ற நிலையில் அதனை பாதுகாப்பதற்காக அரசியலைக் கடந்து குடிமகன் என்ற வகையில் இந்த கருத்தை பதிவு செய்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: