வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!

Saturday, November 25th, 2017

 

வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளராகத் தற்போது பணியாற்றுகின்றவர், குறிப்பிட்ட சில நாட்களே வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருகை தரும் காரணத்தினால், அங்குள்ள பணியாளர்களது பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிய வருகின்றது. இவர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானம் எடுத்து, சுமுகமான தீர்வுகள் எட்டப்பட வேண்டியுள்ளது. அல்லது, மாற்று ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற ஏழு சாலைகளிலும் தழுவல் கடமைகளில் பணிபுரிகின்றவர்களுக்கு பொருத்தமான நியமனங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

சாரதிகள், காப்பாளர்களுக்கான பற்றாக்குறைகள் காணப்படுவதால், போதுமானளவு சாரதிகள் மற்றும் காப்பாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஏழு சாலைகளுக்கும் போதுமான பேரூந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இன்று வடக்கின் பல்வேறு மீள்குடியேற்ற பகுதிகளிலும் போக்குவரத்திற்கான பேரூந்து வசதிகளற்ற நிலையில் எமது மக்கள் பல கிலோ மீற்றர்கள் நடந்து சென்றே தமது அன்றாட மற்றும் அத்தியாவசியப்  பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது இருக்கின்ற பேரூந்துகளும் மிகவும் பழையன. எனவே, புதிய பேருந்துகளை போதியளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts:

மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தெல்லிப்ப ள...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...