வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
Saturday, January 5th, 2019
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் தாம் குடியிருக்கும் நிலங்களுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த குறித்த பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது 1983 ஆம் ஆண்டிலிருந்து தாம் குறித்த ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் குத்தகை அடிப்படையில் பெற்று தமது வாழிடங்களை தற்காலிகமாக அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது குறித்த காணிகள் குத்தகை அடிப்படையில் இருப்பதால் நிரந்தரமான எந்தவிதமான உதவித் திட்டத்தையும் தம்மால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இதனால் தமது அபிவிருத்தி சார் தேவைப்பாடுகள் அனைத்தும் முடக்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் தமக்கு குறித்த காணிக்கான உரிமத்தை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
175 குடும்பங்களது இருப்பிடங்கள் தொடர்பான பிரச்சினையான குறித்த விடயம் அமைந்துள்ளதால் அம்மக்களின் வாழ்வியல் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை காலக்கிரமத்தில் மேற்கொண்டு தருவதாக செயலாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


