வடக்கு கிழக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் காலத்தில் புத்துணர்ச்சியடையும் – பிரதமர் மஹிந்த நம்பிக்கை !

Sunday, December 6th, 2020

வடக்கு கிழக்கில் கடற்றொழில் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில்  பாரிய அபிவிருத்தி அடையும்  என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாவெல்ல பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(06.12.2020) நடைபெற்ற நங்கூரமிடும் தள நிர்மாண பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

சம்பிரதாயபூர்வமாக நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில், முப்பது வருட யுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில்சார் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ள நிலையில் அதற்கான பொறுப்பு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களும் அமைச்சருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை கடுமையாக உழைக்ககூடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் வடக்கு கிழக்கு கடற்றொழில் பாரிய அபிவிருத்தியை அடையும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று தென்னலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்வு காண்பதுடன், மேலும் விருத்தி செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையுடன் செயற்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடன் குருநகர் மற்றும் பருத்திதுறை உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நங்கூரமிடும் தளங்கள் அமைக்கப்பட்டு கடற்றொழில் துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசிய...