யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018

நாட்டின் நிறைவேற்றாளரை ஒரு பக்கத்திலும், பொது மக்களை மறு பக்கத்திலும் வைத்துப் பார்க்கின்றபோது, இதன் மத்தியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவராக, யாப்பியலாளராக நாடாளுமன்ற உறுப்பினரே உள்ளார் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான நடத்தைக் கோவையின் இறுதி வரைபு, அங்கீகாரத்திற்கு என முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பொறுப்புகள், கடமைகள், நடத்தைகள் குறித்ததான நாடாளுமன்றத்திற்குள்ளும், தேர்தல் தொகுதியிலும், பொது மக்களிடத்தேயுமான செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக இந்தச் சபையிலே, பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தும், இன்றைய நிலையில் அந்த விடயமானது ஓர் இறுதி வரைபாக இந்தச் சபையின் அங்கீகாரத்திற்கு வந்திருப்பதையிட்டு இதற்கென முன்முயற்சிகளுடன் வெகு அக்களை கொண்டு உழைத்துள்ள கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு முதலில், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களது பொறுப்புகள், கடமைகள், செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமின்மைகள் பொது மக்களிடையே பெருமளவில் காணப்படுகின்ற நிலைமைகளையும், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயும் காணப்படுகின்ற நிலைமைகளையும் நாம் காணுகின்றோம். இது அவர்களது தவறு என்பதல்ல. பொறுப்புகள், கடமைகள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலான ஒழுங்கமைந்த ஒரு கோவையின் தேவையிலேயே இது தங்கியிருக்கின்றது.

நாட்டின் நிறைவேற்றாளரை ஒரு பக்கத்திலும், பொது மக்களை மறு பக்கத்திலும் வைத்துப் பார்க்கின்றபோது, இதன் மத்தியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவராக, யாப்பியலாளராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரே உள்ளார் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பின்னரான எமது நாட்டில் கொள்கை வகுத்தல் மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்கின்ற துறைசார்ந்தும், சட்ட உருவாக்கத்தினதும் முக்கிய தீர்மானச் சக்தியாக இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரே ஆவார். பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் தொடர் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த எமது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தொடர்பிலான விடயங்களைப் பொறுத்தமட்டில், தேர்ந்தெடுக்கப் படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதற்கே எமது மக்கள் முக்கியத்துவம் வழங்குகின்றார்களே அன்றி, அவரது கடமைப்பாடுகள் யாவை? என்பது தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

யாப்பினை உருவாக்குகின்றவர் என்பதாலும், அந்த யாப்பிற்கு உட்பட்ட வகையில் சட்ட உருவாக்கங்களின்போது, மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் என்பதாலுமே நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பியலாளர் என இனங்காட்டப்படுகின்றார் என்பதனை பொது மக்களில் பெரும்பாலானவர்களும், ஒரு சில நடாளுமன்ற உறுப்பினர்களும் கூட அறிந்திராத நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இத்தகையதொரு நிலைமையானது குறிப்பாக, 1977ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிற்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது வருகையின் பின்பாக எழுந்துள்ளதென அரசியல் விமர்சகர்கள் கூறகின்றதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன;.

Related posts:


பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் 'தேவா பாத்' சான்று பகரும் என்கிறார் யாழ்...
டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - கடற்றொழில் அமைச்சர...