யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 17th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலானது வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டுவரும் தேர்தலாகவே அமையப்பெறவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் பாரம்பரிய தலைமைகளிலிருந்து மாறி யதார்த்தவாதிகளிடம் தமது அரசியல் தலைமைத்துவத்தை ஒப்படைப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன்.
பாரம்பரிய கொள்கைகளுடன் இருக்கும் கட்சிகள் ஏமாற்றுக் கட்சிகள் என்று மக்கள் இன்று அறிந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் இனிவருங்காலங்களில் தாம் எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி ஆளும் கட்சியில் இருக்கும் தரப்பினரது சுயநலத் தன்மைகளை மக்கள் புரிந்துள்ளனர்.
அந்தவகையில்தான் பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதற்கு அமைவாக இன்று அவர்களது உண்மை முகங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. அவர்களது கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லை. இன்று மக்களிடம் முகமூடிக் கொள்ளையர்களாக அவர்கள் வாக்குகளைக் கேட்கத் தயாராகியுள்ளனர் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும்போது ஊடக தர்மத்துக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய டக்ளஸ் தேவானந்தா எமது கட்சி மீது திட்டமிட்ட வகையில் சிலர் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பான உண்மைச் செய்திகளும் அவை யாரால் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மையும் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இதில் யார் குற்றவாளிகள் என்பதையும் வரலாறு நிரூபித்துவருகின்றது என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் இதேபோன்று பிணை முறி விவகாரம் தொடர்பிலும்; தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் எம்மிடம் நம்பிக்கை மட்டுமன்றி யதார்த்தமான வழிமுறைத் தீர்வுத்திட்டமும் இருக்கிறது . அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சி நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம் கிடையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

DSC_0149

Related posts: