மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 6th, 2018

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்போர் அந்த அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர். சரியான முறையில் மாகாண சபை முறைமையினை இயங்கச் செய்திருந்தால், எமது பகுதிகள் இன்று வறுமை நிலைக்கு உட்படிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறைகள் பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நன்மை கருதியாக மாற்றிமைக்கப்பட்டால், அதன் மூலமாக எமது மக்களின் தேவைகள் பலவற்றினைத் தீர்க்க முடியும். என்றாலும், வடக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தை எமது மக்களிடமிருந்து அபகரித்துக் கொண்டவர்களால் அதனை திறம்பட இயங்க வைக்க இயலாத காரணத்தினால், மாகாண சபை முறைமையை நிராகரித்துவிட முடியாது.

மாகாண சபை முறைமை தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே அதனை ஏற்று, திறம்பட நிர்வகிக்கப்பட்டிருந்தால், இன்றைய நிலையில் எமது மக்களின் பிரச்சினைகள் பல தீர்ந்திருக்கும் என்பதை நான் தொடர்ந்தும் கூறி வருகின்றேன்.

அன்று இந்த மாகாண சபை முறைமையினை எதிர்த்தவர்கள், தும்புத் தடியால்கூட தொட்டுப் பார்க்க மாட்டோம் என்றவர்கள் தமது அரசியல் சுயலாப பதவிகளுக்காக மட்டுமே ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு, மாகாண சபை முறைமையினையே பழுதாக்கிவிட்டுள்ள நிலையே தொடர்கின்றது.

இன்றைய நிலையில், போதைப் பொருட்களின் கூடாரமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகளவு போதைப் பொருட்கள் விற்பனையில் இருப்பதாகவே நாளாந்த ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்தப் போதைப் பொருட்கள் ஏற்படுத்துகின்ற சமூகச் சீர்கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. பாலியல் வன்புணர்களுக்கும் இந்தப் போதைப் பொருட்களே பெருமளவில் காரணமாக இருக்கின்றன. அதாவது, இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற அமைதியின்மை என்பது பாரியதொரு கேள்விக்குறியாகவே வளர்ந்து வருவதை வடக்கிலே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய அமைதியின்மையின் எதிரொலியாகவே பல்வேறு வன்முறை சார்ந்த சம்பவங்கள் யாழ் குடாநாட்டிலே இடம்பெற்று வருகின்றன. வேலைவாய்புகளற்ற பிரச்சினை ஒரு புறத்தில் தலைதூக்கி வருவதும், விவசாயம் உள்ளிட்ட செய்கைகள் தொடர்பில் காலநிலையின் பாதிப்புகளும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுமென வடக்கின் அனைத்து மாவட்டங்களும் பாரிய வறுமை நிலைக்கே தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் எமது மக்களைத் தலைநிமிர்ந்து வாழச் செய்வதற்காகவே நாம் உழைத்து வருகிறோம். எனினும், போதிய அரசியல் பலத்துடன் எம்மால் செயற்பட முடியுமானால், இன்னும் பல்வேறு விடயங்களை எமது மக்களது நலன்கருதி எம்மால் சாதிக்க முடியும் என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

அந்த வகையில் மாகாண சபை என்பது எமது மக்களுக்கு முக்கியமானதொரு ஏற்பாடாகும். இதனைத் திறம்பட இயங்கச் செய்வதிலேயே அதனது வெற்றியானது தங்கியுள்ளது.

எனவே, எமது மக்களின் நலன்களிலிருந்து சிந்தித்து, செயற்படத் தக்கவர்களாகிய  எமது கைகளில் வடக்கு மாகாண சபை தரப்படுமானால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் எமது பகுதிகளை நாமே அபிவிருத்தி செய்து கொள்ள முடியம் என்பதை மிகவும் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

Related posts:

முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? - புனர்வாழ்வு அ...
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
மற்றுமோர் உலக சாதனை படைத்த திருச்செல்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌ...