மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னின்று செயற்படுவேன். – உடப்பு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ உறுதிபடத் தெரிவிப்பு!
 Saturday, August 6th, 2022
        
                    Saturday, August 6th, 2022
            
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்பது மாத்திரமன்றி, அவற்றை நிறைவேற்றுவதற்கும் முன்னின்று செயற்படுவேன் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சிலாபம், உடப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று(06.08.2022) இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது, உடப்பு மீன்பிடிக் கிராமத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கடலரிப்பை தடுத்து, தமது எதிர்கால இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்கள், தமது தொழில் நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் முன்னெடுப்பதற்கு ஏதுவாக இறங்கு துறை ஒன்றினை அமைத்து தருமாறும் தற்போது எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
அதேபோன்று, உடப்பு மீன்பிடிக் கிராமத்தினை மையமாகக் கொண்ட தனியான பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் கடலரிப்பை தடுப்பதற்கு நிதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக உறுதியளித்ததுடன், மீன்பிடி இறங்குதுறை ஒன்றினை அமைப்பதற்கும் முடியுமான விரைவில் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, உடப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையாக புதிய பிரதேச கோரிக்கை காணப்படுவதனால், அதுதொடர்பாக அமைச்சரவையில் வலியுறுத்தி, குறித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு முடிந்தளவு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விசேடமான ஏற்பாடுகள் முயற்சிக்கப்பட்டு வருகின்ற போதிலும் தற்போதைய சந்தை விலையில் மண்ணெண்ணையை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் முடிந்தளவு குறைந்த விலையில் மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாகவும், விரைவில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை கிடைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடற்றொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த வாரம் தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, அப்பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று புத்தளம், சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        