மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, December 27th, 2018
எமது மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் தமது சுயலாபங்களுக்காகவும் இருப்புக்காகவும் நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று கூறிவிட்டு தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் நீதிமன்றை நாடியிருக்கின்றார்கள்.
இது தமிழ் மக்கள் மீதான நலன்களுக்காக அல்ல. தமது இருப்புக்காகவும் சுயலாபத்திற்காகவும் சக தமிழ் கட்சிகள் தரகு அரசியலை நடத்துகின்றார்கள். தேர்தல் காலங்களில் வலிந்து கூறப்பட்ட வாக்குறுதிகளான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது விடயம், அரசியல் கைதிகளது விடுதலை, நில விடுவிப்பு, அரசியல் தீர்வு உள்ளிட்ட மக்கள் நலன்சார் விடயங்களுக்காக இவர்கள் நீதிமன்று செல்லவில்லை.
தங்களுடைய சுயலாபங்களுக்காகவும் இருப்பிற்காகவுமே இவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளமை தற்போது வெளிச்சமாகியுள்ளது.
எதிர்க் கட்சியாகவும் அதன் தலைமையாகவும் இருந்தவர்கள் சரியான வகையில் செயற்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மைத் தவிர ஏனைய சக தமிழ் கட்சிகள் சரியாக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனிடையே கொழும்பில் நடைபெற்ற சொற்விற்பன்னம் விவாத நிகழ்வு தொடர்பாகவும் கருத்துக்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

Related posts:
|
|
|


