பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Thursday, August 11th, 2016
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கொக்குடையான், மாளாப்பு ஆகிய குளங்களையும், ஏனைய சிறு குளங்களையும் இணைத்து பாரிய நிலப்பரப்பில் நீரைத் தேக்குவதன் மூலம் குடி நீர், விவசாய செய்கை, கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கான மேய்ச்சல் தரை உருவாக்கம் என்பவற்றுக்குப் போதியளவு நீரைப் பெற முடியும் என்பதுடன் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் முடியும். எனவே இதனை அடிப்படையாகக் கொண்ட பூநகரிக் குளத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் – கிளிநொச்சி மாவட்டமானது 1,237.11 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பளவையும், 443.3 சதுர கிலோ மீற்றர் நீர்ப் பரப்பையும் கொண்ட மாவட்டம். இதில் 448.7 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பையும், 85.69 சதுர கிலோ மீற்றர் நீர்ப் பரப்பையும் கொண்டிருக்கும் பூநகரி பிரதேசத்தில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 24 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள நிலப் பரப்பில் 35 சத வீதமானவை விவசாயக் காணிகள். இதில் 35 வீதமானவை நெற் செய்கைக்கான காணிகள். இங்கு சராசரி மழை வீழ்ச்சி 1,100 மில்லி மீற்றர் ஆகும். வருடத்தில் செப்ரெம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் எதிர்பார்க்கப்படும் இந்த மழையை நம்பி பெரும்போகத்தில் சுமார் 500 ஏக்கர் காணிகளில் நெற் செய்கையும், சுமார் 100 ஏக்கரில் சிறு தானிய செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.
இப் பகுதியில் நிலையான நீர் நிலைகள் இல்லாதவிடத்தும், சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குளங்களும், கொக்குடையான், மாளாப்பு ஆகிய இரு பெரிய குளங்களும் காணப்படுகின்றன. தற்போது இக்குளங்களில் காணப்படுகின்ற ஓரளவு நீரைக் கொண்டு அதனை அண்டிய பகுதிகளில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கால்நடைகளும் ஓரளவு பயனைப் பெறுகின்றன. மேற்படி குளங்கள் புனரமைக்கப்படாமை காரணமாகவும், கடல் நீர் உட்புகுவதாலும் இப்பகுதியில் அதிகளவில் குடி நீருக்கான தட்டுப்பாடு நிலவுவதால், சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவிலிருந்தே பவுஸர்கள் மூலம் குடி நீர் கொண்டுவரப்படுகிறது.
எனவே, மேற்படி இரு பாரிய குளங்களையும், ஏனைய சிறு குளங்களையும் இணைத்து, அவற்றைப் புனரமைத்து, உவர் நீர்த் தடுப்பு அணை அமைக்கப்பட வேண்டும். அத்துடன் மண்டக்கல்லாறு, குடாமுறிப்பு ஆகிய ஆறுகளுக்கிடையில் உவர் நீர்த் தடுப்பு அணை கட்டப்பட வேண்டும். மண்டக்கல்லாறானது 300 சதுர கிலோ மீற்றர் நீரேந்து பரப்பைக் கொண்டிருந்தும் இதில் 35.82 வீதமான நீரே தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஆற்றை செம்மண்குன்றில் மறித்து அணை கட்டுவதன் மூலம் பூநகரி குளத்திற்குத் தேவையான நீரை கொண்டுவர முடியும்.
இதன் மூலம் அப்பகுதியில் குடி நீர்ப் பிரச்சினையை போதியளவு தீர்க்கவும,; மேலும் பாரிய நிலப் பரப்பில் விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும், கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கான மேய்ச்சல் தரைகள் உருவாக்கத்திற்கும் போதியளவு நீரை வழங்கமுடியும். அத்துடன் கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு ஓரளவு குடி நீரையும் வழங்க முடியும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


