புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுறுத்தும் என  நம்பினேன் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 4th, 2016

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இருந்துவந்த குரும்பசிட்டி, கட்டுவன், காங்கேசன்துறை பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் நிலங்களை படையினர் மீண்டும் மக்களிடம் கையளித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாகவே மீள்குடியேற முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இன்னும் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருக்கும் 5000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றது.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எமது மக்கள் மீள் குடியேறுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் வழங்கவேண்டும். அத்துடன் அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வதற்குத் தேவையான கனரக வாகனங்களை வழங்கி உதவ வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக காங்கேசன்துறை புகையிரத நிலையப்பகுதியும், நடேஸ்வராக் கல்லூரியை அண்மித்த பகுதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். 2014 ஆண்டு முன்னைய ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதைகளை புனரமைக்கவும், புகையிரத சேவையை வழங்கவும் இந்திய அரசிடம் உதவிகளைக் கேட்டிருந்தேன்.

எனது கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் பெரும்பங்களிப்புடனும், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடனும் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதைகள் புனரமைப்புச் செய்;யப்பட்டு மீண்டும் 2014 அக்டோபர் 13ஆம் திகதி புகையிரதப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்காக இந்தச் சந்தர்ப்பத்திலும் இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனதும், எமது மக்களினதும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அப்போது யாழ்ப்பாண புகையிரதப் பயணம் காங்கேசன்துறைவரையும் புனரமைக்கப்பட வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன்.

காங்கேசன்துறைப் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக, மக்கள் மீள் குடியேற முடியாமலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதும், புகையிரதம் காங்கேசன்துறைவரை செல்ல வேண்டும் என்றும், பின்னர் மக்களை அங்கு குடியேற்றலாம் என்றும் மனதிற்குள் எண்ணியிருந்தேன்.

புகையிரதப்பாதையை காங்கேசன்துறைவரை செப்பனிட்டு அங்கே புகையிரதத்தை அனுப்புவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்தார்கள்.மக்கள் இல்லாத காங்கேசன்துறைக்கு புகையிரதம் போவதால் நன்மை ஏதும் எல்லை என்று பரிகாசம் செய்தார்கள்.

பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவித்து அங்கு மக்களை குடியேற்றம் செய்துவிட்டு பின்னர் காங்கேசன்துறை நோக்கி புகையிரதத்தை அனுப்புங்கள் என்று கூறி எனது முயற்சியை விமர்சனம் செய்தார்கள்.

மக்கள் குடியேற்றப்படுவதற்கான புறச்சூழலை ஏற்படுத்துவதற்காகவே புகையிரதம் அங்கு போகவேண்டும் என்பதில் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கையும் இல்லை. அதில் விருப்பமும் இல்லை.

காணிகள் விடுவிக்கப்படுவதும், அங்கு வாழ்ந்த மக்கள் அவர்களது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படுவதும் அவசியமாகும். அதற்காக கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்துக்கு ஏற்றவகையில் தொடர்ச்சியாக முறச்சி செய்தேன்.

அதாவது ஆடுகின்ற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகின்ற மாட்டை பாடிக்கறக்க வேண்டும் என்றார்களே அதைப்போல் அப்போதைய அரசாங்கத்தையும், படைத்தரப்பையும் தந்திரோபாயமாக அணுகவேண்டியிருந்தது.

அதேவேளை இந்திய அரசியன் உதவியோடு முன்னெடுக்கப்படும் புகையிரதப் பாதை புனரமைப்புப் பணியும், அங்கு புகையிரதம் செல்வதும் அத்திட்டத்திற்கு அமைய முன்கூட்டியே நடந்து முடியவேண்டும் என்று கூறி திட்டம் நிறைவேற கடுமையாக உழைத்தேன்.

காங்கேசன்துறைப் பகுதி விடுவிக்கப்பட வேண்டும் என்பதும், அங்கு வாழ்ந்த மக்கள் அங்கேயே மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசியல் ரீதியாக யார்? அறிக்கைகளை விடுத்தாலும் அதற்கும் மேலாக யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகின்ற அந்தச் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை கூறுவதுபோல் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று நான் நம்பினேன்.

எனது நம்பிக்கை இன்று நிறைவேறியிருக்கின்றது. இன்று காங்கேசன்துறைப் பகுதியை படையினர் விட்டுச் சென்றுள்ளார்கள். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது பகுதிகளிலும் மீளக் குடியேறும் சூழல் உதயமாகியுள்ளது.

மீள்குடியேற அங்கு செல்லும் எமது மக்களுக்கு வழித்துணையாகவும், நம்பிக்கையாகவும் இருப்பது புகையிரப் பாதையும், புகையிரதமும்தான்.

ஒருவேளை காங்கேசன்துறை விடுவிக்கப்பட்ட பின்னர் புகையிரதப்பாதையை செப்பனிடவும், புகையிரதத்தை பயணிக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூட்டமைப்பினர் கூறியதைக் கேட்டு அன்று நானும் கவனம் எடுக்காமல் இருந்திருந்தால் இன்று எமது மக்களுக்கு மீள் குடியேறுவதற்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவே கஸ்ட்டமான சூழலில் புகையிரதப் பயணம் சாத்தியமே ஆகியிருக்காது.

இன்று ஆட்சியை மாற்றியதாகவும், புதிய ஆட்சியில் அரசோடு இணக்க அரசியல் நடத்துவதாகவும் கூறிக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைமைப் பதவி, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவி, மாவட்டங்களின் இணைத்தலைமைப் பதவி என்பவற்றையும், சொகுசு வாகனங்களையும் பெற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.

குறைந்தபட்சம் விடுவிக்கப்பட்ட காணிகளில் எமது மக்கள் மீளக்குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா? அல்லது 65000 பொருத்து வீடுகளை குறுக்கே விழுந்து தடுத்த இவர்கள், அதற்கு மாற்றாக எமது மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். கிடைப்பதை தடுக்கின்றார்களே தவிர அதற்குப் பதிலாக எதையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.

யாரோ கூறியதுபோல், கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாத கூட்டமைப்பினர், வானம் ஏறி வைகுண்டம் போகப் போவதாக தமிழ் மக்களுக்கு கதை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

 

Related posts:

கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னின்று செயற்படுவேன். - உடப்பு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...