தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

எமது மக்களுக்கான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தோழர் அமீனாக பயணித்த சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தோழர் அமீனின் இழப்பு குறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அனுதாப செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

80 களின் நடுப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல். எப். இயக்கத்தில் தன்னை  இணைத்துக் கொண்ட தோழர் அமீன், அன்றிலிருந்து  இறுதிவரை எனது நம்பிக்கைகுரிய தோழனாக பயணித்தவர்.

ஈ.பி.ஆர்.எல். எப். இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் அதன் செல்நெறியை தீர்மானிப்பதில் தோழர் அமீனின் கருத்துக்களும் வாதங்களும் பாரிய பங்களிப்புச் செலுத்தியமையை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கி்றேன்.

அக்காலப் பகுதியில் மக்களை அணி திரட்டுவதற்காக எம்மால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் அனைத்திலும் தோழர் அமீனின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்திருந்தது.

பிற்பட்ட காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தினகரன் நாளிதழ் போன்றவற்றின் மூலம் தனிமுத்திரையைப் பதித்திருந்தார்.

மக்களுக்கு சரியான கருத்தை எடுத்துச் செல்வதற்காக எனது பக்கபலத்துடன்  வெளியிடப்பட்ட தினமுரசு நாளிதழை சரியான திசையில் எடுத்துச் செல்வதிலும் சமூகநீதியுடன் யதார்த்தமான கருத்துக்களையும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் தோழர் அமீனின் சிந்தனை முக்கியமானது.

எமது மக்களின் நல்வாழ்வு தொடர்பாக ஓய்வின்றி உழைத்த சிந்தனையாளனை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.

தோழர் அமீனின் இழப்பினால் துயருற்றிருக்கும் தோழர்கள், உறவினர்கள் மற்றும் அன்னாரின் மனைவி,   பிள்ளைகள் அனைவருடனும் எனது துயரை பகிர்ந்து கொள்வதுடன் மூச்சை நிறுத்தி விட்ட என் நீண்ட காலத் தோழனுக்கு அஞ்சலிகயை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...
"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” - எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப...
மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி - இந்தியத் தனியார் முதலீட்டாளர்க...

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவா...
தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் - ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...