தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Saturday, January 19th, 2019
தமிழ் மக்கள் அரசியலில் தெளிவான நிலையை அடைவதனூடாகவே, எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான நிலையான அரசியல் தீர்வுகளையும் அபிவிருத்திகளையும் எட்ட முடியும். அந்த வகையில் சரியான அரசியல் தலைமையை உருவாக்க வேண்டியது தமிழ் மக்களின் இன்றைய தேவையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்pனருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அல்வாய் குமுதேனி சன சமூக நிலையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –
இப்பகுதி மக்களின் பல்வேறுப்பட்ட தேவைப்பாடுகள், குறிப்பாக வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், வீதி புனரமைப்பு உள்ளடங்களான தேவைப்பாடுகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாது பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றியும் காணப்படுகின்றனர். இவ்வாறான தேவைப்பாடுகள் தீர்க்கப்படாது தொடர்வதற்கு காரணம் தமிழ் மக்கள் தேர்வு செய்து வந்த அரசியல் தலைமையே ஆகும்.
நாம் சுயநலன்களுக்காக மக்களது வாழ்வியலை பயன்படுத்துவது கிடையாது. அவர்களது வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் நிலையானதாக பெறப்பட்டு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே அயாராது உழைத்து வருகின்றோம்.
அந்த வகையில் இனிவரும் காலங்களில் மக்கள் தெளிவான அரசியல் தலைமையை தெரிவு செய்வதனூடாக தமது எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்பது மட்டுமல்லாது சிறந்த வாழ்வியலை உருவாக்கி கொள்ள முடியும் என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அந்த வழிமுறையை உருவாக்கி தருவதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம். அதற்கான அரசியல் பலத்தை நீங்கள் எமக்கு தரும் பட்சத்தில் அது நனவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது குறித்த சந்திப்பில் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துறை ஸ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் பருத்திதுறை நகர செயலாளர் குமார், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சாந்ததேவி ஆகியோர் உடனிருந்தனர்.




Related posts:
|
|
|


