தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 10th, 2017

எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெற்காசிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், உலகளாவிய ரீதியில் தனியார்த்துறை மூலமான மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக் கொண்டால், மிக அதிகளவிலானவை இந்தியாவிலேயே உள்ளன. அந்த வகையில், 190 அரச மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில் 222 தனியார்த்துறை மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றன. என்றாலும், மருத்துவக் கல்லூரிகளின் உலகளாவிய தரப்படுத்தலின் பிரகாரம் இந்தியா 112வது இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரச மருத்துவக் கல்லூரிகளில் உள்வாங்கப்பட வேண்டுமானால் சில மாநிலங்களில் மதிப்பெண் முறையும், பல மாநிலங்களில் மதிப்பெண்களுடன் நுழைவுத் தேர்வுகளும் பின்பற்றப்படுகின்ற காரணத்தினால், இவற்றில் வெற்றி பெறாத மாணவர்கள் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரிகளை நாடுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் அதிகம் என்பதாலும், அக் கல்லூரிகள் கல்வி அடங்கலான ஏனைய தரம் பற்றி அக்கறை கொள்வது குறைவு என்பதாலும், பல மாணவர்கள் சீனாவிலுள்ள அரச மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்கின்ற ஒரு நிலை அதிகரித்து வருகின்றது.

இந்திய தனியார்த்துறை மருத்துவக் கல்லூரிகளில் பயில, ஒருவருக்கு இந்திய ரூபாவில் 45 முதல் 75 இலட்சங்கள் செலவாகின்ற நிலையில், சீனாவில் அரச மருத்துவக் கல்லூரிகளில் இம் மாணவர்கள் கல்வி பயில, இந்திய ரூபாவில் ஒருவருக்கு 15 முதல் 20 இலட்சம் ரூபாவே செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அமெரிக்காவில் 62 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயற்படுகின்றன. இவை, இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல், அரச ஆதரவு பெற்று இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் அரசக் கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டு வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், தற்காலத்தில் பல்துறை சார்ந்தோரது கவனக் குறைபாடுகள், வினைத்திறன் இன்மை, உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் இன்றிய மந்த கதியிலான அதிகாரிகளின் செயற்பாடுகள், சமூகம் சார்ந்த அக்கறையின்மை போன்ற காரணிகளால் டெங்கு நோய் போன்ற தொற்று நோய்கள் நாடளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையினைத் தவிர்த்துப் பார்க்கின்றபோது, சுகாதாரத் துறைசார்ந்த குறைந்தளவிலான ஆளணியுடன், மக்களின் சராசரி ஆயுட்கால அதிகரிப்பு, தாய், சிசு மரண வீதங்களின் குறைவு, போசாக்கு தரமுயர்வு என்று பார்க்கின்றபோது எமது சுகாதாரத்துறையானது தரத்தில் மேலோங்கி வருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் மருத்துவக் கல்வியானது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற நிலையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும், எமது நாட்டில் சுகாதார சேவையில் மருத்துவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறை என்பது தொடரும் நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தனியார்த்துறையினரின் பங்களிப்பானது மருத்துவக் கல்வி சார்ந்து தேவைப்படுகின்றது என்ற நிலை உருவாக்கம் பெறுகிறது.

எமது நாட்டில் மருத்துவத் துறைசார்ந்த அனுமதிகளுக்கான கேள்விகள் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், அதனை சமாளிக்க இயலாத நிலையே எமது பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது. மேலும், இறுக்கமான அனுமதிக் கொள்கைகள், சிரேஷ;ட இடைநிலைக் கல்வி சார் ஒழுங்கமைப்புகளிலுள்ள பலஹீனங்கள் போன்றவை காரணமாகவும் மாணவர்களது தனியார் துறைசார் மருத்துவக் கல்விக்கான தேவைகள் மிகையாகின்றன என்றும் கூறப்படுகின்றது.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை எடுத்து, அதற்கான நெறிமுறைகளை வகுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இன்றளவில் 8 அரச மருத்துவ பீடங்கள் எமது நாட்டில் செயற்பட்டு வருகின்றன. உயர்தர உயிரியல் பிரிவு பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் இந்த மருத்துவ பீடங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவாகின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த பொருளாதார வசதியுடையவர்களாகவே இருக்கின்றனர்.  மேற்படி பரீட்சையில் சித்தியடையாத பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் மருத்துவத் துறையை அல்லது வெளிநாட்டு மருத்துவத் துறை கல்வி நாடிச் செல்கின்றனர்.

அந்த வகையில், இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரம் பெற்ற, இலாப நோக்கற்ற வெளிநாட்டு மருத்துவக் கல்வியை மேற்கொண்டு, நாடு திரும்பும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையின் பொதுவான பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில், இத்தகைய தமிழ் மொழி மூல மாணவர்கள் அப் பரீட்சைக்குத் தோற்றும் முகமாக தங்களது மொழி வசதிக்கேற்ப கற்கையினை மேற்கொள்வதற்கு தங்களுக்கு உகந்த பல்கலைக்கழகங்களை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஆரம்பத்தில் இங்கு வழங்கப்பட்டிருந்தன. எனினும், தற்போது அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அம் மாணவர்களுக்கு பரிச்சயமான மொழியற்ற – மொழி பெயர்ப்பு வசதிகளுமற்ற, தனிச் சிங்கள மொழியில் பயிலமர்வுகள் நடத்தப்படுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு அம் மாணவர்கள் அனுப்பப்படுவதால், தமிழ் மொழி மூலமான மாணவர்கள் பாரிய இடர்பாடுகளை அடைகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் சிங்கள மாணவர்களுக்கு வசதியாக மொழி பெயர்ப்பு ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில், தமிழ் மொழி பெயர்ப்பு வசதிகளற்ற பல்கலைக்கழகங்களுக்கு தமிழ் மொழி மூல மாணவர்களை உட்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மேலும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஆளணிப் பற்றாக்குறை நாட்டில் நிலவுகின்ற நிலையில், மருத்துவத் துறை சார் கல்விக்கான மாணவர்களது கேள்விகள் அதிகம் இங்கு காணப்படுகின்ற நிலையில், மருத்துவ பீடங்களை அதிகரிப்பதற்கும், தற்போதைய நிலையில் பல்வேறு தேவைகள் நிமித்தம் அவசியமாகப்படுகின்ற வன்னி மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தாதியர்களுக்கான பற்றாக்குறைகள் நிலவுகின்றன. பாடசாலைக் கல்வியில் உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்களில் சித்தியடைவோர் குறைந்துவரும் காரணத்தால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாய பாடம் என்பதால், உயர் தரத்தில் ஏனைய பாடங்களில் திறமைச் சித்திகளைப் பெறுவோருக்கும் தாதியர் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும், தனியார்த்துறை தாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை எற்படுத்தி, அதில் சித்தியடைவோருக்கு அரச மருத்துவமனைகளில் நியமனங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவதானங்களை செலுத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

மருத்துவக் கல்வி என்பது பாரிய முதலீட்டு செலவுக்கு உட்படுகின்ற காரணத்தால், முதலீட்டுச் செயற்பாட்டினுள் ஒன்றாக இணைத்து இதனை இனங்காண்பது என்பது பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் புறந்தள்ள முடியாத ஒன்றாகியுள்ளது. எனவே, மருத்துவம் சார்ந்த அரச முதலீடுகள் போதியளவு இல்லாத நிலையில், மேலும், அத்துறை சார்ந்து மாணவர்களை உள்வாங்கும் நெறிமுறையில் தளம்பல்கள் ஏற்படும் நிலையில், தனியார் மருத்துவக் கல்வித்துறையானது தவிர்க்க முடியாதது என்றாலும், அது தேவை எனில், அதனை அரச அனுசரணை மற்றும் முழுமையான நெறிப்படுத்தல்களின் கீழ் தனியார்மயமாக்கினால், இது தொடர்பில் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் எனக் கருதப்படலாம்.

இன்று எமது நாட்டில் முக்கியமானதொரு பேசு பொருளாக ஆக்கப்பட்டுள்ள ‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், கொழும்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களின் பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதே நேரம், கடந்த சில தினங்களாகவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எமது வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கான வேலை வாய்ப்புகளைக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக, ஒரு பக்கம் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. மறுபக்கம் ஏனைய துறைசார் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியாத நிலை நாட்டில் காணப்படுகின்றது.

ஏன் இவ்வாறான நிலை இந்த நாட்டில் இன்று உருவாகியுள்ளது? எங்கே தவறு நடந்திருக்கிறது? என்பது குறித்து நாம் சிந்தித்து, செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே, பல்வேறு துறைகள் கொள்கை மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டியிருக்கின்றன என்பதையே இவ்வாறான நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, தொடர்ந்து ஏதேனும் நிவாரணங்களை மட்டும் வழங்குவதையே தொடர்ந்தும் அரசியலாக்கிக் கொண்டிருக்காமல், அந்தந்த பகுதிகளில் அம் மக்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் மாகாண சபைகளுக்கும் பிரதான பங்குண்டு. எனினும், வடக்கு மாகாண சபையைப் போன்று வினைத்திறனற்ற வகையில் செயற்பட்டால், மாகாண சபைகளுக்குரிய பொறுப்புகள் மக்கள் நலன் சாராமல் வீணடிக்கப்படுவதாகவே அமையும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவத்துறை சார் ஆளணிப் பற்றாக்குறையானது கண்டிப்பான அவதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். அதற்கு ஒரு சிறந்த தீர்வு,  தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே எனக் கூற முடியாது. தனியார்த்துறை சார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உதாரணமாக நான் இந்தியாவை மேற்கோள் காட்டியிருந்தேன். அங்கு அந்தக் கல்லூரிகள் பணத்தை மாத்திரமே நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாகவும், தரம் குறித்து  அக்கறை கொள்வதில்லை எனவும் அங்குள்ள மருத்துவத்துறை மாணவர்களே தெரிவித்து வருகின்றனர்.

தனியார்மயப் படுத்தலான மருத்துவக் கல்வியானது கட்டுங்கடங்காத நிலையில் ஊக்குவிப்புகளுக்கு உள்ளாகி, அவற்றின் வெளிப்பாடுகளான மருத்துவர்கள் உள்ளடங்கலான மருத்துவ துறை சார் ஆளணியினர் தேசிய ரீதியிலான துறைசார் தேவைகளைப் பூர்த்தி செய்வோராக இன்றி, வெறுமனே பிரதியிடுபவர்களாக இருப்பின், அது நாடளாவிய ரீதியில் துறைசார் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையுமெனவும், மேற்கத்தைய நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்ற நிலையில், மக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்றும், ஆனால், இலங்கையில் அத்தகைய எற்பாடுகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும், இதனால் அதன் விளைவுகள் பாரதூரமானவை என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

அந்த வகையில் பார்க்கின்றபோது மருத்துவத்துறை சார் ஆளணி என்பது திறமைகளின் அடிப்படையில் உருவாக்கம் பெற வேண்டும். அது பணத்தையோ அன்றி அரசியலையோ அடிப்படையாகக் கொண்டு அமையுமானால், எமது நாட்டு மக்களின் நலன்கள் கேள்விக்குறியாகிவிடும் நிலையே தோன்றும் என்பது குறித்து நாம் சிந்தித்தித்து பார்க்கவேண்டியுள்ளது.

தனியார்த்துறைசார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிக்கும் நிலைப்பாடுகள் மேலோங்குகின்ற நிலையில், அதன் போட்டித் தன்மைகள் அதிகரித்து, அது சந்தை ரீதியிலான ஈர்ப்புடன்கூடிய துறையாக மாற்றம் பெறுகின்ற நிலையில், வர்த்தக நோக்கங்கள் மாத்திரமே உச்சம் பெறுகின்றபோது, அங்கிருந்து வெளியேறுகின்ற மருத்துவர்களது தகுதிகள் குறித்த நம்பகத் தன்மையானது உறுதிப்படுத்தப்படாத நிலைகளிலேயே தங்கி நிற்கும் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

எனவே, இவ்வாறான மிக முக்கியத் துறைசார் தீர்மானங்கள் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன் கருதியாக, முழுமையான அரச வழிநடாத்தலின் கீழ், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடன் எடுக்கப்படுவது ஆரோக்கியமாகும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:

தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் - நாடாளும...
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனா...

வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி...
எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் - கிளிநொச்சி யில்...
கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...