தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, February 7th, 2019

தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்கமைக்கின்ற சட்டம் என்பது மிகவும் முக்கியத்துவமானது என்றே கூற வேண்டும். இந்த முகவர் நிலையங்களை பதிவு செய்வது தொடர்பிலான கட்டணங்கள் குறித்து மாத்திரம் அவதானங்களை செலுத்தாமல், மேற்படி தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுகின்ற பணியாளர்களது நலன்களைக் கருத்தில் கொண்டு, பாரிய ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுத்தபின் தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்துகின்ற கட்டளைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்று இந்த நாட்டில் தொழில்வாய்ப்புக்கள் இன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நாட்டின் கல்விக் கொள்கைக்கும், நவீன தொழில்வாய்ப்புகளுக்கும் இடையிலான பாரிய இடைவெளி காரணமாகவும் இந்த நாட்டில் படித்த படிப்புக்கு தொழில்வாய்புகள் இல்லாத நிலையும், தொழில்வாய்ப்புகளுக்கான வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில், அதற்கான தகுதிகள், திறமைகள், கல்வியறிவு என்பன இல்லாதவர்கள் பலரும் தொழில்வாய்ப்புகளின்றி இருக்கின்ற நிலையும் தொடர்கின்றது.

இந்த நிலையில், மிக இலகுவாக பலருக்கு கை கொடுக்கின்ற ஒரு தனியார்த்துறை தொழில்வாய்ப்பாக இந்த நாட்டில் காணப்படுவது இந்த தனியார் பாதுகாப்பு சேவையாகும்.

நாளாந்த பத்திரிகைகளின் விளம்பரங்கள் மற்றும் தொழில்வாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பிலான இலத்திரனியல் ஊடகங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வெற்றிடங்களாக தனியார் பாதுகாப்பு தொடர்பான வேலைவாய்ப்புகளே காணப்படுகின்றன.

இந்த தனியார்; துறை பாதுகாப்பு முகவர் நிலையங்கள் வெற்றிடங்களுக்கான விளம்பரங்களை வெளியிடுகின்றபோது, அநேகமான நிலையங்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களையே வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக, கவர்ச்சிகரமான ஊதியங்கள் தொடர்பில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இத்தகைய விளம்பரங்களில் குறிப்பிடப்படுகின்ற மொத்த ஊதியங்கள் அங்கு பணியாற்றுகின்றவர்களின் கைகளுக்குக் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

அதேபோன்று தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அநேகமான விளம்பரங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த தங்குமிட வசதி என்பது தொழில் புரிய வேண்டிய இடங்களில் தொழிலோடு இணைந்ததாக பல நிறுவனங்களால் ஒதுக்கப்படுகின்றதே தவிர, அவர்களுக்கென்று தொழில் நிலையம் சாராத பிரத்தியேக தங்குமிட வசதிகள் வழங்கப்படுவதில்லை.

பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபட்ட அரச தொழிற்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பலரும்,  ஓய்வு பெற்ற ஏனைய அரச உத்தியேகத்தர்கள் பலரும், தற்கால நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க இயலாமல், மேலதிக வருமானங்களுக்கென இந்த தனியார் பாதுகாப்புத் துறை பணிகளில் ஈடுபட முன்வருகின்றனர்.

அதேநேரம், வேறு தொழில்வாய்ப்புகளில் ஈடுபட இயலாத ஏனையவர்களும், ஏனைய தனியார்த்துறை பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் இந்தத் தனியார் பாதுகாப்புத் துறையின் தொழில்களை நாடுகின்றனர். இவர்களைத் தவிர்த்து, இத்துறைக்கு வேறு எவரும் – அதாவது தொழில்வாய்ப்புகளற்ற கற்றறிந்த இளைஞர்கள் பலரும் செல்லாத நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறு தனியார் பாதுகாப்புத் துறையில் தொழில் பெறுகின்றவர்கள், மேற்படி தொழில்வாய்ப்புக்கான வெற்றிங்களுக்கான வியம்பரங்களில் காணப்படுகின்ற சலுகைகள் கிடைக்காமை காரணமாகவும், ஊதிய பற்றாக்குறை காரணமாகவும், வசதிகள் இன்மை காரணமாகவும்,  நாளடைவில் பணியைவிட்டு வெளியேறுகின்ற நிலையில், பணியில் இருப்போர் தொடர்ந்து மேலதிக பணிக்காக நிர்பபந்திக்கப்படுகின்றனர். இந்த வகையில் பலர் தொடர்ந்து 24 மணி நேரம்கூட தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வடக்கில் வரட்சி,தெற்கில் வெள்ளம் : நிவாரணங்கள், இழப்பீடுகளின் நிலை என்ன?- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வன விலங்குகளுக்கான கட்டுப்பாட்டு முறைமைகள் தேவை - டக்ளஸ் தேவா...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை மட்டுமல்ல தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது – நாடாளுமன்றில்...