ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சை விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Tuesday, August 10th, 2021

ஜெயபுரம், வன்னேரிக்குளம் வயல்க்காணி சர்ச்சைக்கு, எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதுதொடர்பாக விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

ஜெயபுரம் மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் வயல்காணிகள் தொடர்பாக காணப்பட்ட சர்ச்சைக்குத் தீர்வுகாண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்றையதினம் ஜெயபுரம் பூநகரி பிரதேச உப அலுவலகத்தில் மேற்கொண்டுடிருந்தார்.

பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், கமநலசேவைகள் ஆணையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவையாளர்கள் உள்ளிட்டோருடன் இதுதொடர்பான கலந்துரையாடலை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராம விவசாயிகள் 134 பேருக்கு வனவளத்திணைக்கத்திடமிருந்து விடுவித்து வழங்கப்பட்ட வயல்காணிகளில் சில கரைச்சி – பூநகரி பிரதேச செயலக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அவை தமக்குச் சொந்தமானவை என்று, கரைச்சிப் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குள விவசாயிகள் சிலர் முறைப்பாடு தெரிவித்தையடுத்தே இந்தச் சர்ச்சை எழுந்தது.

வன்னேரிக்குளப் பகுதியில் காலம் காலமாக தாம் வயல் செய்துவந்த நிலப்பரப்பு ஜெயபுரம் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாக வன்னேரிக்குள விவசாயிகள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

எனினும், காணிகள் ஏதுமற்ற நிலையில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தமக்கு, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர்படி வாழ்வாதாரத்துக்காகவே வயல் காணிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனையும் தம்மிடமிருந்து பறிப்பது அநியாயம் என்றும் ஜெயபுரம் கிராமத்து மக்கள் கவலை வெளியிட்டனர்.

1980 களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான எல்லைகள் தொடர்பாக தெளிவான ஒரு வரையறை இல்லாத காரணத்தினால் இதற்கான சரியான தீர்வை எட்டுவது சிரமமாக இருந்தது.

இந்நிலையிலேயே காணி அளவையியல் திணைக்கள உத்தியோத்தர்களுடனும் இதுதொடர்பாகக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதுதொடர்பாக விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


இரணைதீவில், மீன்பிடிக்கவும், பண்ணைகளை அமைக்கவும் விதிக்கப்பட்ள்ள தடை நீக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வல...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பி...