கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்மந்தப்படுத்துவது அடிப்படையற்றது. – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Friday, November 3rd, 2023

எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களினால் அமைக்கப்படுள்ள கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்மந்தப்படுத்துவது அடிப்படை அற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் தொழில் முயற்சியாளர்  ஒருவருக்கு சொந்தமான   வீ.ஆர் இன்ரநெசனல் தனியார் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள  கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட  கடலட்டை குஞ்சு விற்பனையை இன்று(03.11.2023) வைபவ ரீதியாக ஆரம்பித்து உரையாற்றும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“எமது பிரதேச வளங்களை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் சுபீட்சமாக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், எமது பிரதேச வளங்களின் பயன்களை எமது மக்களே பூரணமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவுமே கடலட்டை பண்ணை விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றேன்.

ஆனால், எமது மக்கள் பொருளாதார ரீதியில் வலுவடைவதை விரும்பாத அரசியல் விஷமிகள் சிலரும், கடற்றொழிலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற சிலரும்,  கடலட்டைப் பண்ணை தொடர்பாக தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கடலட்டைப் பண்ணைகளை விஸ்தரிப்பதற்கு சீனாவில் இருந்து ஒரு குழுவினர் விரைவில் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக, இன்றைய பத்திரிகை ஒன்றில்கூட செய்தி வெளியாகியிருக்கிறது. அது உண்மைக்கு புறம்பான செய்தி.

இவ்வாறான அடிப்படையற்ற தீயநோக்கங் கொண்ட  செய்திகள் தொடர்பாக நான் அலட்டிக் கொள்வதில்லை.  மக்களும்  அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

பூகோள அரசியல் என்று வந்தால் எனது முன்னுரிமை இந்தியாவாகவே இருக்கும் என்பதை பலமுறை தெரிவித்திருக்கின்றேன். அதனை இங்கு  மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்யும்  நிலையங்கள் உருவாக்கப்படுவதன் மூலமே, கடலட்டைப் பண்ணைகளை எமது மக்களுக்கான நிலைபேறான பொருளாதார மார்க்கமாக உருவாக்க முடியும் என்ற நோக்கோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தொழில் முயற்சியாளரின்  கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் வெற்றிகரமான செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் - அல்லைப்பிட்டிஒளிவிழாவில் அமைச்சர்...
யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெர...