ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளை கட்டமைப்பு ரீதியாக மேலும் விரிவாக்கம் செய்து வருவதையும், சமூகநலத் திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்த முயற்சி செய்வதையும் நீங்கள் அறிவீர்கள்.

Thursday, September 6th, 2018

என் மரியாதைக்கும், அன்புக்கும் உரித்தான தோழர்களே…. .ஆதரவாளர்களே….. நலன் விரும்பிகளே…!
உங்களுக்கு வணக்கம்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளை கட்டமைப்பு ரீதியாக மேலும் விரிவாக்கம் செய்து வருவதையும், சமூக நலத்திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்த முயற்சி செய்வதையும் நீங்கள் அறிவீர்கள்.

கட்சியின் உத்தேச மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் செய்யும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும், வழங்கும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையில் தமிழர்களாகிய நாம் எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதும், யுத்தத்தினால் அழிந்த நமது தாயகப் பிரதேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதும், உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடி தமது உடலிலும், மனதிலும் ஆறாத வடுக்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து இயக்க முன்னாள் போராளிகளினதும், சமூகத்தில் துணையையும். பாதுகாவலர்களையும் இழந்து தவிக்கும் கைம்பெண்கள் மற்றும், அநாதரவானவர்களினதும் வாழ்வை பொருளாதார பலத்துடன் மேம்படுத்துவதும் இவை தவிரவும், அங்கங்களை இழந்தவர்களையும், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களையும் பராமரிப்புச்செய்ய, மையங்களை அமைத்து சேவை செய்வதும் எமக்கு முன்னாலிருக்கும் பாரிய சவால்களாகும்.

அரசியல் ரீதியாகநாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளும் தேவைகள் மிக அதிகமானதாகும். ஆகவே, புலம் பெயர்ந்து வாழும் தாயக உறவுகள் மனிதாபிமானத்துடன் ஆதரவுக்கரம் நீட்டினால், முதலீடுகளைத் திரட்டிதாயகப் பிரதேசத்தில் புதிய தொழில் துறைகளை உருவாக்கிஎமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அத்துடன் இளைஞர், யுவதிகளுக்கு எதிர்காலம் குறித்தசரியான வழி காட்டலையும் செய்யமுடியும்.

எமது மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக தாயகப் பிரதேசத்திலிருக்கும் வளங்களை அடையாளங்கண்டு, சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியும் எமது மக்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்த முடியும். மருத்துவ உதவித் திட்டங்களை உருவாக்கி பாதிப்புக்களுடனும், மருத்துவத் தேவைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான விஷேட மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொடுக்கமுடியும்.

ஆண்டுதோறும் படிப்பை முடித்துக்கொண்டு பாடசாலையிலிருந்து வெளியேறும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு பயிற்சி மையங்களை நவீனவசதிகளுடன் ஏற்படுத்த முடியும். அங்கே எமது இளையதலை முறையினர் பயிற்சியும் பெற்றுக்கொண்டு, வருமானமும் பெறக்கூடியதாகவும் இருக்கும்.

எனவே புலம் பெயர்ந்து வாழும் எமது தாயக உறவுகளே!

நீங்கள் முன்னர் போராட்டத்திற்கு கைகொடுத்து பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றீர்கள். எமது மக்கள் பெரும் போரைச் சந்தித்து பலவழிகளிலும் பின்னடைவு கண்டு மீள் எழுச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த ஏக்கத்தை போக்க நீங்கள் மனம் வைத்தால் போதும். நாம் யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை. நீங்களே தாயகத் தமிழ் மக்களின் வலிமையானவர்கள்.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னைய வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் இரு பெரும் கட்சிகளும் நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஒருபொது மேடையில் ஒன்று சேர்ந்துள்ளதானது சாதகமானது. இச்சூழலை, தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும், சமூக முன்னேற்றத்திற்கும், முழுமையான அபிவிருத்திக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளும் ஒருவாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான தீர்வானது, மத்தியிலிருந்து மாநிலத்திற்கு அதிகாரங்கள் பகிரப்படுவதும், தமிழர்கள் ஒரு தேசிய இனமாக ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமாக வாழ்வதுமாகும். அத்தகைய உயரிய இலக்கை அடைந்து கொள்வதற்கு, அரசியல் பாதையை வகுக்க வேண்டும். அதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஈ.பி.டி.பியின் நீண்டகாலக் கோரிக்கையாகும்.

13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. தவிரவும் சிங்களமக்கள் மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதால் அவர்களும் அதை எதிர்க்கமாட்டார்கள்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான புறச்சூழலை தோற்றுவிப்பதும், தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி இனங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதும் அதிமுக்கியம் என்பதால், ஈ.பி.டி.பியினராகிய நாம் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களக் கட்சிகளையும், பொது அமைப்புக்களையும், ஆர்வலர்களையும் தொடர்ச்சியாகச் சந்தித்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தெளிவுபடுத்தியும், தேசிய நல்லிணக்கம் அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியும் வருகின்றோம்.

இதற்கிடையே அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கும் முயற்சித்து வருகின்றது. அதில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் எதிர் கொள்ளும் சவால்கள், பாதகங்கள் தொடர்பாக அர்த்தபூர்வமான கலந்துரையாடல்களையும் நாம் சிறுபான்மை மற்றும் சிறியகட்சிகளுடன் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

கட்சியின் உத்தேச மீள் கட்டமைப்புடன் பலமான நிலையில் கட்சியையும், மக்களையும் இலக்கு நோக்கி முன்னகர்த்திச் செல்வதற்கு வடக்கு, கிழக்கில் பிரதேச செயலக நிர்வாக முறையிலும், மேலும் தேவையான இடங்களிலும் அரசியல் அலுவலகங்களை நிறுவுவதும், மாவட்ட அலுவலகங்களை மீள ஒழுங்கு செய்துநிறுவுவதும், மாவட்டங்களை ஒன்றிணைத்து மாகாண நிர்வாகமையத்தை நிறுவுவதும் அதற்குத் துணையாக தலைமை அலுவலகம் செயற்படுவதும் அவசியமாகும் என்பதைநீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

சமகாலத்திற்கு ஏற்ப எமது கட்சியை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுக்கும் போது, அரசியல் பிரிவு, மக்கள் நலத்திட்டப் பிரிவு, ஊடகப் பிரிவு, சட்ட ஆலோசனைப் பிரிவு, கணக்கீட்டுப் பிரிவு, பிரசாரப் பிரிவு போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்களாக அவை செயற்படும். இந்தப் பிரிவுகளை போதுமான ஆளணியுடன் செயற்படுத்த வேண்டும். இவ்வாறு நாம் எமது நிர்வாகக் கட்டமைப்பையும், செயற்பாடுகளையும் எதிர்காலத்தில் செயலூக்கத்துடன் முன்னெடுப்பதற்கும், எமது மக்களுக்கு பலமான பொருளாதார பின்புலத்தை உருவாக்குவதற்கும், புலம் பெயர்ந்து வாழும் தாயக உறவுகளிடம் நிதி உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.

உயரிய அரசியல் இலக்கு நோக்கி நாம் முன்னேறும் அதேவேளை, நமது தாயகப் பகுதியில் பொருளாதார மேம்பாட்டை வளர்க்கும் முயற்சிகளில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பொருளாதார பலமே எமது மக்களின் ஆதாரமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

எமது அழைப்பையும், வேண்டு கோளையும் ஏற்று கடந்த காலத்தில் உதவிகள் செய்ததைப்போல், எதிர்காலத்திலும் கூடுதல் உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். எனது வேண்டுகோளுக்கு சாதகமான பிரதிபலிப்பை நிச்சயம் வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன். ஏற்கனவே எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமக்கு நிதி ஆதார உதவிகளைச் செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருக்கும் புலம் பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உத்தேச செயற்திட்டங்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் ஒவ்வொருவருடைய ஒற்றை நாணயத்திற்கும் முறையான நிதி அறிக்கைகளையும், முன்னேற்ற அறிக்கைகளையும், காலத்துக்குக் காலம் உரியவர்களுக்கு அனுப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை நேர்மையாக முன்னெடுப்பதற்கும் தேவையான பொறிமுறையை உறுதி செய்வது எனது கடமையாகும்.

புலம் பெயர்ந்து வாழும் தோழர்களே…. ஆதரவாளர்களே…..நலன் விரும்பிகளே…

தாயகப் பிரதேசத்தின் எழுச்சிக்காகவும், தாயக மக்களின் மறு மலர்ச்சிக்காகவும் மகாகவி பாரதியார் பாடியதுபோல்,

நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்!

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவும் அற்றவர் வாய் சொல் அருள்வீர்!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சிக்காவும், மக்கள் நலசமூகப் பணிகளுக்காகவும், நிதி உதவி செய்வீர்கள் என நம்புகின்றேன். உங்கள் நிதி உதவிகளை கீழேதரப்பட்டிருக்கும் கணக்கின் பெயருக்கு வைப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

நன்றி
வணக்கம்
தோழமையுடன்
என்றும் மக்கள் சேவையிலுள்ள
டக்ளஸ் தேவானந்தா – பா.உ
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ( ஈ.பி.டி.பி )

Related posts: