விவாகரத்துக்கு சமூகவலைத் தளங்களும் காரணமாகிறது – சட்டத்தரணி சஜிவனி அபேயகோன்!
Friday, September 22nd, 2017இலங்கையில் நிகழும் விவாகரத்துக்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் காரணமாக இருப்பது போன்று சமூக வலைத்தளங்கள், அலைபேசிகள் ஆகியவற்றில் நடைபெறும் கருத்துப் பரவலாக்கமும் இதற்குச் சாதகமாக அமைவதாக இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி சஜிவனி அபேயகோன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சமூகவலைத்தளங்கள் ஆண்-பெண் இருதரப்பும் முறையற்ற தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இவை சாதகமாக அமைகின்றன. அதுவே குடும்ப அமைதிக்குப் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகப் படங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இணைய அரட்டை மூலம் தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை எங்களிடம் சட்ட உதவிகளை நாடிவருவது மூலம் அறியமுடிகின்றது.
சமூகத்தில் குடும்பப் பொருளாதாரப் பலம் கணவனிடமே தங்கியிருப்பதால் பெண்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பதால் முறைப்பாடு செய்ய முன்வருவதில்லை.சிலர் விவாகரத்துக்குச் செல்லாமல் பராமரிப்புப் பணத்தைப் பெற்று குடும்பத்தை நடத்திச் செல்கின்றார்கள்.
எப்படி இருப்பினும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் விவாகரத்து வழக்குகளில் கணவன், மனைவியைப் பிரிக்காமல் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்படும் வேளையில் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரச்சனை உக்கிரமடையும்போது அதனைத் தீர்க்க முடியாமல் போகின்றது – என்றார்.
இதேவேளை மற்றொரு சட்டத்தரணியான நாமல் ராஜபக்ச தெரிவித்ததாவது: கணவன் அல்லது மனைவியின் முறையற்ற தொடர்புகள், தவறான நடத்தை மற்றும் பாலியல் பலவீனம் போன்ற காரணங்களும் இலங்கையில் விவாகரத்துக்குக் காரணமாக அமைகின்றது.
மனதில் தோன்றும் சந்தேகம் காரணமாகப் பிள்ளைகள், உறவுகள் முன்னிலையில் மனைவியால் கணவன் அவமதிக்கப்படும் போது அந்தப் பெண்களே வீட்டில் கணவன் இருக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் சந்தேகம் கொள்கின்றார்கள். இந்த விடயத்தில் மனைவிக்கு அவரது பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது.
வீட்டு வன்முறை என்று கூறும்போது கணவன், மனைவியைக் கை மற்றும் காலால் அடிப்பது மட்டும் தான் என்று நினைக்கின்றோம். அதே நேரம் மறுபக்கத்தில் பெண்களும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கணவனைத் தொடர்ந்து தாக்குகின்ற சம்பவங்களும் எமக்கு முறைப்பாடு செய்யப்படுகின்றன –என்றார்.
Related posts:
|
|