வடக்கு ஆளுநர் கல்வி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

Friday, May 18th, 2018

புத்தளத்துக்கு வழங்கப்படும் வடக்கு மாகாண சபையின் அனைத்து நிதிகளையும் உடனடியாக நிறுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் பணம் நியதிச் சட்டங்களையும் மீறி தொடர்ந்தும் மாகாணத்துக்கு வெளியில் இயங்கும் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தொடக்கம் மாகாண சபை உறுப்பினர்கள் வரை மௌனம் காப்பது தொடர்பில் பத்திரிகை மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் பணம் சில அதிகாரிகள் அரசியல்வாதிகளின் துணையுடன் இரகசியமாக மாகாணத்துக்கு வெளியில் பல அமைச்சுக்களின் ஊடாகவும் நிதி கடந்த காலங்களில் புத்தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் பல பின்னர் கட்டுப்படுத்தப்பட்டன.

இதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வயம்ப மாகாணத்துக்கு நிதி செல்லும் நடவடிக்கைகள் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றில் மன்னார் மாவட்டத்தின் 6 பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குகின்றன.

அங்கு பணியாற்றும. 142 ஆசிரியர்கள் உள்ளிட்ட செலவுக்கு வடக்கு மாகாண சபையின் நிதியில் வருடாந்தம் 200 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இது தொடர்பில் மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் சுட்டிக்காட்டப்பட்டபோதும் மாகாண சபையின் ஆயுள்காலம் முடியும்வரை நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

இதனைப்போல வடக்கு மாகாண முன்பள்ளிகளுக்கு எனத் தனியான நியதிச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலும் மாகாணத்துக்கு வெளியே புத்தளத்தில் உள்ள 68 முன்பள்ளிகளில் பணிபுரியும் 94 ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் நிதி இன்றுவரை வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இவை தொடர்பில் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகளை அழைத்து வடக்கு ஆளுநர் வினவியிருந்தார். அதன்பின்னர் புத்தளத்துக்குச் செல்லும் வடக்கு மாகாண நிதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தி அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எந்தக் காரணம் கொண்டும் வட மாகாண நிதி வெளிச்செல்ல அனுமதிக்க முடியாது என்றும் இதுவரை எத்தனை வருடங்களாக எவ்வளவு நிதி இவ்வாறு சென்றது போன்ற விபரங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 5 வருடமாக முதலமைச்சர் மேற்கொள்ளத் தவறிய ஒரு பணியை ஆளுநர் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொள்ளையர்கள் மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது!
அடையாள அட்டைகள் பெறுவதற்கு கட்டணம் அறவீடு!
பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து!
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!
இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!