தற்போது போன்று எப்போதும் நட்டஈடு வழங்கப்படவில்லை – ஜனாதிபதி!

Sunday, August 4th, 2019

விவசாய சமூகத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்த இயற்கை அனர்த்தங்களின்போது தற்போதைய காலத்தைப்போன்று பெருந்தொகை நட்டஈடு எந்தவொரு அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது பயிர்ச்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து அரசாங்கங்களும் தேர்தல் வாக்குறுதிகளுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டிருந்த மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தான் தலைமைத்துவத்தை வழங்கியதும் நாட்டின் விவசாய சமூகத்தினர்க்காகவாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாய சமூகத்தின் முக்கிய பிரச்சினையான நீர் மற்றும் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு விவசாய காப்புறுதி நட்ட ஈட்டுத் தொகையை வழங்கிவைக்கும் நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் பி.ஹெரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க. நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts: