தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – ஆப்கானில் 12 பேர் உயிரிழப்பு!

Monday, October 15th, 2018

ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தக்கார் மாகாணத்துக்குட்பட்ட ரோஸ்டக் மாவட்டத்தில் இன்று நசீபா யூசுபிபேக் என்ற பெண் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காயமடைந்த 32 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த மாதத்தில் மட்டும் தேர்தல் பிரசார கூட்டங்களில் மூன்று முறை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Related posts: