தலைநகரில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்!

Tuesday, April 11th, 2017

டெல்லியில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செயயப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 28 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழக விவசாயிகளை, பிரதமரை சந்திக்க வைப்பதாகக் கூறி பொலிஸார் அழைத்துச் சென்றனர்.அழைத்துச் செல்லப்பட்டவர்களின் மகஜர் பிரதமர் அலுவலகத்தில் பெறப்பட்ட போதிலும், அவர்களால் பிரதமரை சந்திக்க முடியவில்லை.

பிரதமர் பாராளுமன்றக் கூட்டத்திற்கு சென்றிருப்பதாகக் காரணம் தெரிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகம் உட்பட மத்திய அரசின் முக்கிய அமைச்சுக்களும் குடியரசுத் தலைவர் மாளிகையும் அமைந்துள்ள பகுதியிலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நிர்வாணப் போராட்டம் சில நிமிடங்கள் நீடித்த நிலையில், அவர்களை சமரசப்படுத்திய பொலிஸார், ஆடைகளை அணிய வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படல், வங்கிக்கடனை இரத்து செய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 13 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: