தடைகளை தளர்த்த வளைகுடா நாடுகள் புதிய நிபந்தனை!

Friday, July 21st, 2017

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கட்டார் மீது தடைகளை விதித்துள்ள அரேபிய நாடுகள் கட்டாருடன் சுமூகமான உறவினை ஏற்படுத்திக் கொள்வதற்காக புதிதாக ஆறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுதல், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் பாதுகாப்பான புகலிடங்ககளை வழங்க மறுத்தல், வெறுப்பு மற்றும் வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளை நிறுத்துதல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்தல் போன்ற ஆறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறப்படுவதை தொடர்ச்சியாக மறுக்கும் கட்டார் மேற்படி புதிய கோரிக்கைகள் குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கட்டாருடனான போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய மேற்படி நான்கு அரபுநாடுகளும் கட்டாருடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என ஏற்கனவே 13 கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அனைத்து வலையமைப்பினையும் நிறுத்த வேண்டும், துருக்கி இராணுவ தளத்தினை மூட வேண்டும் ஈரானுடனான உறவுகளைக் குறைப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் குறித்த 13 கோரிக்கைகளும் தமது இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை என கட்டார் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் மேற்படி 13 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என கட்டாரை தொடர்ந்து வலியுறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ள அரேபிய நாடுகள் புதிதாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

அல் ஜசீராவை மூடுவது அவசியமில்லை என்றாலும் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் வெறுக்கத்தக்கப் பேச்சசுக்களை நிறுத்துவது அவசியமான ஒன்று என்ற வகையில், அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடாமல் இதனைச் செயல்படுத்த முடியுமாயின் அதுவே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: