அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு!

Monday, October 22nd, 2018

சோவியத் ரஷியா அதிபராக இருந்த மிக்கேல் கார்பச்சேவுக்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுக்கும் இடையே 1987௲ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8௲ந் தேதி ‘ஐ.என்.எப். ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது, அனைத்து விதமான அணு ஆயுதம் மற்றும் பிற குறுகிய தூர, நடுத்தர தூர ஏவுகணை சோதனைகளை தடை செய்கிறது. குறிப்பாக தரையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் இருந்து 5 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவு வரையில் செல்கிற ஏவுகணைகளை ஏவி சோதிப்பதை தடை செய்கிறது.

இந்த ஒப்பந்தத்தை ரஷியா மதித்து பின்பற்ற வில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார்.அவர் நெவேடாவில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:௲

நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷியா பல ஆண்டுகளாக மீறி வருகிறது. எனவே அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு நாங்கள் விலகப்போகிறோம்.

இருப்பினும் புதிதாக ரஷியாவும், சீனாவும் ஒரு அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்வராவிட்டால், நாங்களும் அத்தகைய ஆயுதங்களை தயாரிப்போம்.

அணு ஆயுத ஒப்பந்தத்தை அவர்கள் (ரஷியா) மீறுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். நாங்களும் ஆயுதங்கள் தயாரிப்போம்.

2014௲ம் ஆண்டு ரஷியா ஒரு அணு ஆயுத ஏவுகணையை சோதித்துப் பார்த்தபோது, அந்த நாடு நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி உள்ளது என்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குற்றம் சாட்டி உள்ளார். அப்போது ஒபாமா ஏன் இது பற்றி அவர்களிடம் பேசவில்லை, ஏன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

2014ம் ஆண்டு ஐ.என்.எப். ஒப்பந்தத்தை ரஷியா மீறியதாக கூறப்பட்டபோது, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகத்தான் ஒபாமா, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவில்லை; அப்படி அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால் மீண்டும் ஆயுதப்போட்டிகள் தொடங்கி விடும் என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியதால்தான் ஒபாமா அவர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவை ரஷியா கடுமையாக சாடி உள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் துணை வெளியுறவு மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கருத்து தெரிவிக்கையில், ‘‘பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினால், அது ஒரு ஆபத்தான முடிவாக அமையும். அது சர்வதேச சமூகத்தால் புரிந்து கொள்ள முடியாததாக அமையும்; கடுமையான கண்டனங்களுக்கும் வழிவகுக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

இதே போன்று ரஷிய தகவல் கொள்கை ஆணையத்தின் தலைவர் அலெக்சி புஷ்கோவ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை அமெரிக்கா எடுத்தால், அது உலகளாவிய ஆயுத நிலைத்தன்மைக்கு விழுந்த மிகப்பெரிய அடியாக அமையும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: