19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் நடால்!

Tuesday, September 10th, 2019


யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டனில் மெட்விடேவை வீழ்த்தி 19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

33 வயதாகும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், 7-5, 6-3, 5-7, 4-6 மற்றும் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள நடால், முதல் இரண்டு செட்களை வென்று போட்டியை வெல்லும் தருவாயில் இருந்த நிலையில், மெட்விடேவ் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்று போட்டியை பரபரப்பான டிஸைடர் செட்டுக்கு (முடிவை நிர்ணயம் செய்யும் செட்) எடுத்து சென்றார்.

ஆனால், அவரது அனுபவம் மற்றும் அற்புதமான போராட்ட பாணியால் நான்கு மணி நேரம் மற்றும் 51 நிமிடங்கள் நடந்த போட்டியில் நடால் வெற்றி வாகை சூடினார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்விஸ் நாட்டை சேர்ந்த தனது சக போட்டியாளரும், மற்றொரு ஜாம்பவான் வீரருமான ரோஜர் பெடரரின் அதிக கிராண்ட்ஸ்லாம் (20 கிராண்ட்ஸ்லாம்) என்ற சாதனையை சமன் செய்யும் தூரத்துக்கு நடால் வந்துள்ளார்.

“என் டென்னிஸ் வாழ்க்கையில் இது மிகவும் உணர்ச்சி மிகுந்த இரவு” என ரஃபேல் நடால் தனது வெற்றிக்கு பின் கூறினார்.

இது சிறப்பான இறுதி ஆட்டமாக இருந்தது என்றும் அவர் கூறினார். ஆட்டம் முடிந்தவுடன், மகிழ்ச்சியில் நடால், டென்னிஸ் மைதானத்திலேயே கொண்டாடினார்.

23 வயதான மெட்விடேவ், தனக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற நடாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அழும் நிலையில், வருத்தத்துடன் காணப்பட்டார் மெட்விடேவ்.

“19வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற ரஃபேலுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது நம்ப முடியாதது, சிறப்பு வாய்ந்தது,” என மெட்விடேவ் தெரிவித்தார்.

நிவ்யோர்க்கில் உள்ள ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் கூடியிருந்த சுமார் 24,000 பேர் இந்த ஆட்டத்தை கண்டுகளித்தனர். அவர்கள் எழுப்பிய ஆரவாரம் அங்கு ஒரு உணர்ச்சி மிகுந்த சூழலை உருவாக்கியது

Related posts: